Last Updated : 28 Mar, 2019 05:28 PM

 

Published : 28 Mar 2019 05:28 PM
Last Updated : 28 Mar 2019 05:28 PM

மோடி பணமதிப்பிழப்பால் பொருளாதாரத்தை அழித்தார் காங்கிரஸ் சீரமைக்கும்: ராகுல் காந்தி பேட்டி

பிரதமர் மோடி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவந்து  நாட்டின் பொருளாதாரத்தை அழித்தார், நாங்கள் பொருளாதாரத்தை சீரமைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்தார்.

மக்களவைத் தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை வாக்குப்பதிவும் மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிடிஐ நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் கட்சியின் 'நியாயம்'(Nyay) திட்டம் இரு நோக்கங்களுக்காக கொண்டு வரப்படுகிறது, நாட்டில் உள்ள 20 சதவீத ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை உறுதி செய்தல், மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், சீரழிந்துகிடக்கும் பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருதல், ஆகிய இரு நோக்குகள் முன்வைக்கப்படுகிறது.

பிரதமர் மோடி தனது மோசமான கொள்கைகளான பணமதிப்பு நீக்கம், கப்பார் சிங் டேக்ஸ்(ஜிஎஸ்டிவரி) ஆகியவற்றின் மூலம் பொருளாதாரத்தில் இருந்த அனைத்து பணத்தையும் கடந்த 5 ஆண்டுகளில் நீக்கிவிட்டார். குறிப்பாக அமைப்பு சாரா தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நாங்கள் தேர்வு செய்துள்ள இந்த திட்டத்துக்கு 'நியாயம்' என்று ஏன் பெயர் வைத்தோம் தெரியுமா. கடந்த 5 ஆண்டுகளாக நரேந்திர மோடி, ஏழை மக்களிடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு எதுவுமே திருப்பிச் செய்யவில்லை. அதற்கு நியாயம் கிடைக்கவே நியாயம் என்று பெயர் வைத்தோம்.

விவசாயிகள், சிறு, குறு தொழில் செய்பவர்கள், வேலையில்லாத இளைஞர்கள், வீட்டில் என் தாய், சகோதரிகள் சிறிது சிறிதாக சேர்த்து வைத்திருந்த சிறுசேமிப்புகள் அனைத்தையும் மோடி பணமதிப்பு நீக்கம் மூலம் அபகரித்துக் கொண்டார். இவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டதை நாங்கள் திருப்பி அளிக்க முயற்சிக்கிறோம்

நிச்சயம் எங்களின்  'நியாயம்' திட்டம் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும். தேசத்தில் வறுமை, ஏழ்மையின் மீது விழுந்த கடைசி தாக்குதலாக இருக்கும். இந்த திட்டம் முழுமையாக ஆலோசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நடைமுறைக்கு சாத்தியமாக என்று சோதிக்கப்பட்டுள்ளது. பாஜகவின்  பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டி போல் சிந்திக்காமல் செயல்படுத்தமாட்டோம்.

பொருளாதார வல்லுநர்களிடம் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் நியாயம் திட்டத்துக்காகப் பெற்றோம். இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.3.60 லட்சம் கோடி செலவாகும். இந்த திட்டத்தால், நாட்டின் நிதிப்பற்றாக்குறை எந்தவிதத்திலும் மோசமடையாது என்பதை கூறுகிறேன்.

பொருளாதாரத்தில் மோசமான நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஏராளமான பொருளாதார வல்லுநர்கள், ஆய்வாளர்களிடம் கருத்துக்களைக் கேட்டு, அவர்களின் ஆய்வறிக்கையை ஆய்வு செய்து, திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் அரசின் நிதிநிலை எவ்வாறு செல்லும் என்பதற்கான முன்னோட்ட ஆய்வுகள் நடத்திதான் எங்களுடைய தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளோம்.

நிச்சயமாக இதை மக்களைக் கவர்வதற்கானத் திட்டமாகக் கருத முடியாது.

15 முக்கியமான நபர்களுக்கு ரூ.3.5 லட்சம் கோடியை மோடி கொடுத்தால் அதை கவர்ச்சித்திட்டம் என்று சொல்வதில்லை.

ஆனால், ஏழை மக்கள் பலன் அடைய வேண்டும், அவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை கொண்டுவந்தால், அதை கவர்ச்சித்திட்டம் என்று கூறுகிறார்கள்.

இந்த திட்டத்தை முதல் கட்டமாக பல்வேறு கிராமங்களில் செயல்படுத்தி முடிவுகளை அறிவோம். உண்மையான பயனாளிகளை நாடுமுழுவதும் கண்டறிந்து பின்னர் நாடு முழுவதும் அமல்படுத்துவோம்.

இந்த சோதனை திட்டம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்தான் செயல்படுத்தப்படுமா என்பதை திட்டத்தை செயல்படுத்தும் வல்லுநர்கள் முடிவு செய்வார்கள். கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 14 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீண்டுள்ளார்கள். எங்கள் நோக்கம் நாட்டில் ஏழ்மையை, வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதுதான்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x