Published : 28 Mar 2019 04:04 PM
Last Updated : 28 Mar 2019 04:04 PM

கர்நாடகாவில் ஆளும் கட்சியினரைக் குறிவைத்து பெரிய அளவில்  வருமான வரிச் சோதனை: அமைச்சர் வீட்டிலும் ரெய்டு - தேவே கவுடா, குமாரசாமி கடும் கண்டனம்

ஆளும் மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் தொடர்பான புள்ளிகளை குறிவைத்தும் அமைச்சர் புட்டராஜு வீட்டிலும் வருமான வரித்துறையினர் பெரிய அளவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது பரபரப்பாகியுள்ளது.

 

முதல்வர் குமாரசாமி, ‘பழிவாங்கும் விதமான வருமான வரிச் சோதனைகள் இருக்கிறது’ என்று சரியாகக் கணித்த சில மணி நேரங்களில் இந்த ரெய்டுகள் நடைபெற்றுள்ளன.  இதனையடுத்து நிறுவனங்களை, அரசு எந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக மம்தா பாணி தர்ணாவில் இறங்குவதாகவும் குமாரசாமி எச்சரித்துள்ளார்.

 

நேற்று இரவு மஜதவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள வர்த்தகர் சித்திக் செய்ட் வீட்டில் முதல் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கும்  இலக்குகளுக்கும் வருமான வரிக்குழு சோதனை பரவியது.  பெங்களூரு, மாண்ட்யா, மைசூரு, ஹசன், உள்ளிட்ட 20 இடங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

 

இந்த ரெய்டு மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை உதவியுடன் நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக மாநில போலீஸார் உதவியுடனேயே ரெய்டு நடத்தப்படும் ஆனால் இது தவிர்க்கப்பட்டு சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்புடன் ரெய்டு நடத்தப்பட்டுள்ளதும் அங்கு சர்ச்சையாகி வருகிறது.

 

இதனையடுத்து எச்.டி.குமாரசாமி தன் ட்விட்டர் பக்கத்தில், “வருமானவரித்துறை சோதனைகள் மூலம் பிஎம் மோடி உண்மையான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கைத் தொடுத்துள்ளார். பாலகிருஷ்ணா என்ற ஐடி அதிகாரிக்கு பதவி ஆசைக் காட்டி இந்த பழிவாங்கும் ஆட்டத்தை ஆடுகின்றனர். அரசு எந்திரம், மற்றும் ஊழல் அதிகாரிகளை வைத்து எதிர்க்கட்சியினரை துன்புறுத்தும் செயல் மிகவும் இழிவானது” என்று சாடியுள்ளார்.

 

பொதுப்பணித்துறை அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள்  மற்றும் முதல்வர் குமாரசாமி சகோதரர் எச்.டி.ரெவன்னா ஆகியோர் மீதும் ஹசனில் ரெய்டு பாய்ந்தது. அமைச்சர் புட்டராஜுவின் இல்லங்கள், அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் புகுந்தனர்.

 

கர்நாடகாவில் உள்ள வருமானவரித்துறை உயரதிகாரி பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவர் என்று பாஜகவினரே கூறுவதாக புட்டராஜா தெரிவித்துள்ளார். என்னை ரெய்டு செய்வதன் மூலம் சுயேச்சை வேட்பாளர் சுமலதா அம்ப்ரீஷுக்கு மறைமுகமாக உதவி செய்வதாக புட்டராஜா குற்றம்சாட்டினார். 

 

ஹெச்.டி.ரெவன்னா கூறும்போது, ரெய்டினால் எங்களுக்கு 10% கூடுதல் வாக்குகள்தான் கிடைக்கும், என்று தெரிவித்துள்ளார்.  மேலும், “தவறு நிகழ்ந்திருந்தால் ஐ.டி ரெய்டு நடத்தலாம் அதில் தவறில்லை, நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை, ஐ-டி ஆபிசர் பி.ஆர்.பாலகிருஷ்ணா ஒரு பாஜக ஏஜெண்ட், பாஜக சேவகராகப் பணியாற்றி வருகிறார்” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

 

மேலும் ரெய்டுகள்:

 

கிரானைட் யூனிட் வைத்திருக்கும் கிருஷ்ணே கவுடா இடத்திலும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹசன் பொதுப்பணி பொறியாளர் சி.எஸ். மஞ்சு அதிகாரபூர்வ இல்லத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது. ஷிமோகாவில் இரு ஆட்டோமொபைல் ஷோரூம், இதன் உரிமையாளர் டி.டி.பரமேஷ்வர்,  இவர் தேவே கவுடாவின் உறவினர்.

 

தேவேகவுடா கண்டனம்:

 

தி இந்து, ஆங்கிலம் நாளிதழில் தேவே கவுடா இந்த ஐ-டி ரெய்டுகளுக்கு கண்டனம் தெரிவித்த போது, “சுதந்திர இந்தியாவில் இப்போதைய பிரதமர் போன்று ஒருவரும் இவ்வளவு தரக்குறைவான இறங்கியதில்லை. நிறுவனங்களை மோடி பயன்படுத்தும் விதமும் எதிர்க்கட்சிகளை அடக்கும் விதமும் மன வேதனை அளிக்கிறது. ரெய்டு நடத்தும் ஐ-டி உயரதிகாரி ஜூனில் ஓய்வு பெறுகிறார், தனக்கு 2 ஆண்டுகாலம் பதவி நீட்டிப்பு வேண்டும் என்பதற்காக மத்திய ஆட்சிக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக நடந்து கொள்ளப் பார்க்கிறார். தலைவர்களுக்கு பணம் கொடுத்தப் புகாரில் எடியூரப்பா டைரிப்பக்கங்கள் போலியானவை என்று ‘நற்சான்றிதழ்’ அளித்தவரும் இவரே” என்றார் கவுடா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x