Published : 26 Mar 2019 04:41 PM
Last Updated : 26 Mar 2019 04:41 PM

மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும் காரணிகள் எவை? ஏடிஆர் அமைப்பின் அதிர்ச்சி ரிப்போர்ட்

ஒரு தேர்தலில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு மக்கள் வாக்களிப்பதைத் தீர்மானிக்கும் காரணிகளில் பிரதானமாக மதுபானம், ரொக்கம், இலவசங்கள் ஆகியவையே முக்கியமாக இருப்பதாக ஏடிஆர் என்ற ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

 

நாடு முழுதும் 2.7 லட்சம் மக்களுக்கும் அதிகமானோரிடம்  நடத்திய ஆய்வில் 41.34% மக்கள், மதுபானம், ரொக்கம், இலவசங்கள் விநியோகமே யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதைத் தீர்மானிப்பதாகத் தெரிவித்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

ஏடிஆர் நடத்தும் 3வது அனைத்திந்திய ஆய்வாகும் இது. 534 மக்களவைத் தொகுதிகளில் சுமார் 2,73, 487  வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 97.86% வாக்காளர்கள் கிரிமினல் அல்லது குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்கள் நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ இடம்பெறக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் 35.89% வாக்காளர்கள் ஒரு வேட்பாளர் குற்றப்பின்னணி உள்ளவராக இருந்தாலிம் கடந்த காலத்தில் தொகுதி மக்களுக்கு நல்லது செய்திருந்தால் வாக்களிப்பதில் தவறில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

 

மேலும் மிக முக்கியமாக வேலைவாய்ப்புப் பெருக்கம், ஆரோக்கியம் மற்றும் சுகாதார நலன்கள் ஆகியவையே பெரும்பாலான வாக்காளர்களின் கவலையாக உள்ளது, இதுதான் வாக்களிப்பைத் தீர்மானிக்கும் என்று இவர்கள் கருதுகின்றனர்.

 

இது தொடர்பாக 31 விஷயங்களை ஏடிஆர் பட்டியலிட்டு கருத்து கேட்ட போது இந்த விஷயங்களில் அரசின் செயல்பாடு சராசரிக்கும் கீழ் என்று வாக்காளர்கள் உணர்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

ஒன்று முதல் 5 வரையிலான அளவு நிர்ணயத்தில் பொதுப்போக்குவரத்து சிறப்பாக இருக்க வேண்டும் என்று சராசரியாக 2.58 சதம் விரும்புகின்றனர். வீட்டு உபயோக மின்சாரம் சரியாக இருக்க வேண்டும் என்று 2.53 சதம் விரும்புகின்றனர். அதே போல் குடிநீர் பிரச்சினையை 2.52 சதம் எழுப்பினர். நதி, குளம், ஏரி தூய்மையாக இருப்பதை 2.51 சதம் வலியுறுத்துகின்றனர். பெண்களுக்கு அதிகாரம் மற்றும் பாதுகாப்புக்கு 2.48. ஊழல் ஒழிப்புக்கு 1.37, பயங்கரவாதத்துக்கு எதிராக 1.15.

 

“இந்த ஆய்வு முழுதும், நாடு நெடுகிலும் வேலை வாய்ப்புகள் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும், ஆரோக்கியம், சுகாதாரத் துறை சார்ந்த அக்கறைகள் ஆகியவற்றுக்கே மக்கள் பிரதான முன்னுரிமை அளித்து வருகின்றனர். 2017 முதல் மக்கள் அதிகம் முன்னுரிமை அளிக்கும் விஷயங்கள் வேலை வாய்ப்பு, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்” என்று ஏடிஆர் சர்வே தெரிவிக்கிறது.

 

சர்வேயின் படி வேலைவாய்ப்பு நன்றாக இருப்பது அவசியம் என்று 46.80% மக்களும், ஹெல்த் கேர் மேம்பட வேண்டும் என்று 34.60% வாக்காளர்களும் குடிநீர் விவகாரத்துக்கு 30.50% வாக்காளர்களும் முன்னுரிமை கோரியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக நல்ல சாலை வசதிகளை 28.34% வாக்காளர்களும், பொதுப்போக்குவரத்து மேம்பட வேண்டும் என்று 27.35% வாக்காளர்களும் முன்னுரிமை அளிக்கின்றனர்.

 

மாநிலம்வாரியாக அசாமில் 45.78% வாக்காளர்கள் ஹெல்த் கேருக்கு அதிக முன்னுரிமை அளிக்கின்றனர்.  கேரளாவில் ஹெல்த்கேருக்க்கு 45.24% வாக்காளர்களும் ராஜஸ்தானில் ஹெல்த் கேருக்கு 43.13% வாக்காளர்களும் முன்னுரிமை அளிக்கின்றனர். கர்நாடகாவில் 50.42% மக்கள் குடிநீருக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். ஆந்திராவில் குடிநீருக்கு 45.25% வாக்காளர்களும் கேரளாவில் 44.77% வாக்களர்களும் குடிநீருக்கு அதிக முன்னுரிமை அளிக்கின்றனர்.

 

இவ்வாறு இந்த ஏடிஆர் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x