Published : 26 Mar 2019 03:53 PM
Last Updated : 26 Mar 2019 03:53 PM

டிடிவி தினகரன் அணிக்கு பொதுச்சின்னம் வழங்கும் உத்தரவு: தேர்தல் ஆணையம் முறையீடு; உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

டிடிவி தினகரன் அணிக்கு பொதுச்சின்னம் வழங்கும் உத்தரவை இனி வரும் காலங்களில் முன்னுதாரணமாக எடுக்கக்கூடாது என உத்தரவிடக் கோரி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

குக்கர் சின்னம் கேட்டு டிடிவி அணியினர் தாக்கல் செய்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் பொதுச்சின்னம் ஒன்றை தினகரன் அணிக்கு வழங்க உத்தரவிட்டது. இதை முன்னுதாரணமாக எடுக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் சார்பில் இன்று மதியமே உடனடியாக தலைமை நீதிபதி அமர்வு முன் முறையீடு செய்யப்பட்டது. அதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

முன்னதாக, இன்று காலை குக்கர் சின்னம் வழக்கில் நடைபெற்ற வாதம்:

டிடிவி தரப்பு கபில் சிபல் : ஏற்கெனவே இடைத்தேர்தலுக்கு இந்தச் சின்னம் ஒதுக்கப்பட்டது.

தலைமை நீதிபதி: உங்களுக்கு முதலில் குக்கர் சின்னத்தைக் கொடுத்தது தேர்தல் அதிகாரி. உங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கான ஆவணம் எங்கே?

டிடிவி தரப்பு கபில் சிபல்: டெல்லி உயர்நீதிமன்றம் முதலில் எங்கள் தரப்புக்கு குக்கர் ஒதுக்கியது.

தலைமை நீதிபதி: தேர்தல் அதிகாரி உங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கான ஆவணம் எங்கே?

டிடிவி தரப்பு கபில் சிபல்: இரட்டை இலை வழக்கில் மேல்முறையீடு செய்தபோது, இடைக்காலமாக குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரிய தனி மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தலைமை நீதிபதி: பதிவு செய்யப்படாத ஒரு குழுவுக்கு அவர்கள் கோரும் சின்னம் ஒதுக்க முடியுமா? ஒரு குறிப்பிட்ட சின்னத்தை ஒருவருக்குக் கொடுங்கள் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலுமா?

டிடிவி தரப்பு கபில் சிபல்: இரட்டை இலை தொடர்பான மூல வழக்கு நிலுவையில் இருந்ததால் தான் டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலமாக குக்கர் சின்னத்தை எங்களுக்கு வழங்க உத்தரவிட்டது. அதே போல் இப்போது உச்ச நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்க முடியும்.

தலைமை நீதிபதி: குக்கர் சின்னத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் ஏன் ஒரே நேரத்தில் கோருகிறீர்கள்?

டிடிவி தரப்பு கபில் சிபல்: இரட்டை இலை பிரதான வழக்கு, தற்போது தேர்தலைச் சந்திக்க எங்கள் அணிக்கு இடைக்காலமாக குக்கர் சின்னம் கேட்கிறோம்.

தலைமை நீதிபதி: குக்கர் சின்னம் யாருக்கும் கொடுக்கவில்லை என்றால் உங்களுக்கு தேர்தல் ஆணையம் கொடுக்கப் போகிறது. இதை நாங்கள் ஏன் உத்தரவிட வேண்டும்? சின்னம் கோரும் நீங்கள் கட்சியைப் பதிவு செய்யுங்கள், ஏன் பதிவு செய்ய மறுக்கின்றீர்கள்?

டிடிவி தரப்பு  கபில் சிபல்: குக்கர் இடைக்கால நிவாரணம் தான். மேலும் தற்போது பதிவு செய்ய காலம் இல்லை. இரட்டை இலை கோரிய வழக்கும் நிலுவையில் உள்ளது

தலைமை நீதிபதி: உங்கள் கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சியா ?

டிடிவி தரப்பு கபில் சிபல்: பதிவு செய்யத் தயார். ஆனால் தற்போது நேரம் இல்லை.  கட்சியைப் பதிவு செய்வது தொடர்பாக இன்று உறுதி மொழி கொடுக்கிறோம். ஆனால், தற்போது குக்கர் சின்னம் ஒதுக்குங்கள்.

தலைமை நீதிபதி: ஒரு பொதுச்சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன தயக்கம்?  ஏதாவது பொது சின்னம் ஒதுக்குங்கள்.

தேர்தல் ஆணையம் தரப்பு:  பொதுச்சின்னம் ஒதுக்க முடியாது, அப்படி வழங்க 30 நாட்கள் ஆகும். ஏனெனில் அந்தச் சின்னம் வழங்குவது தொடர்பாக கருத்து கேட்க வேண்டும்.

தலைமை நீதிபதி: நேர்மையான தேர்தல் நடத்த, ஒரே சின்னம் கோருகின்றனர். அனைவருக்கும் தனித்தனி சின்னம் ஒதுக்குவதற்குப் பதிலகாக, ஏன் ஒரு பொதுச்சின்னம் ஒதுக்கக்கூடாது? ஏதாவது ஒரு Free symbol கொடுக்க முடியுமா ? தங்கள் தரப்புக்குப் பெயர் இருக்கிறதா ?

டிடிவி தரப்பு கபில் சிபல்: அமமுக பெயர் தொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் கடிதம் கொடுத்துள்ளோம், ஆனால் பதிவு செய்யவில்லை. ஆனால் நாங்கள் அதிமுகவின் ஒரு பிரிவு.

தேர்தல் ஆணையம:  ஒரே பொதுச்சின்னம் ஒதுக்க முடியாது இவர்கள் சுயேட்சை வேட்பாளர்கள். எனவே தனித்தனி சின்னம் தான் கொடுக்க இயலும். அனைவருக்கும் ஒரே பொதுச்சின்னம் கொடுக்க தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட முடியாது .இவர்கள் அனைவரையும் சுயேட்சை வேட்பாளர்களாகவே கருத முடியும்.

தலைமை நீதிபதி: சுயேட்சைகளுக்கு எப்போது சின்னம் ஒதுக்குவீர்கள்?

தேர்தல் ஆணையம்: வேட்பு மனு திரும்பப் பெறும் நாள் முடிந்தவுடன்?

தலைமை நீதிபதி: எதன் அடிப்படையில் ஒதுக்குவீர்கள்?

தேர்தல் ஆணையம்: பொதுச்சின்னங்களில் ஒன்றினை சுழற்சி முறையில் கொடுப்போம்

தலைமை நீதிபதி: அப்படி என்றால் அதே பாணியில் இவர்களுக்கும் முடிந்த வரை ஒரே சின்னத்தைக் கொடுக்க முயற்சிக்கலாமே?

ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு : குக்கர் உள்ளிட்ட ஒரே பொதுச் சின்னத்தை அமமுக வேட்பாளர்கள் அனைவருக்கும் ஒதுக்க கூடாது. இரட்டை இலை சின்னத்தைப் பெறும் முயற்சியில் இரண்டு முறை டிடிவி தினகரன் தரப்பு தோற்றுவிட்டனர். எனவே இவருக்கு இனி இரட்டை இலை கிடையவே கிடையாது.

இன்று அமமுக தரப்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது அவர்கள் சுயேட்சையாகவே கருதப்படவேண்டும். அவர்களுக்கான விதியே வேறு. அவர்களுக்கு 10 பேர் சாட்சியம் அளிக்க வேண்டும். எனவே சட்டப்படி ஒரே பொதுச்சின்னம் ஒதுக்கக் கூடாது.

டிடிவி தரப்பு கபில் சிபல்: நாங்கள் பதிவு செய்யப்பட்ட கட்சி என்றால், எதிர் தரப்பினருக்கு இங்கு வேலையே இல்லை.

தலைமை நீதிபதி: மொத்தம் எத்தனை சின்னம் ஒதுக்கப்படும் நிலையில் உள்ளது?

தேர்தல் ஆணையம்: மொத்தம் 192  சின்னங்கள்  உள்ளன.

ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு: பதிவு செய்யப்படாத டிடிவி தினகரன் கட்சிக்கு ஒரு பொதுச்சின்னம் வழங்கினால், அது தவறான முன்னுதாரணமாகிவிடும். பதிவு செய்யாத பல அமைப்புகள் சின்னம் கோரி வருவார்கள்.

தேர்தல் ஆணையம்: சட்டம் தெளிவாகச் சொல்கிறது. பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தான் பொதுச் சின்னம். நாங்கள் சட்டதிட்டத்தை மீறிச் செயல்பட முடியாது.

தலைமை நீதிபதி உத்தரவு

குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று பதிவு செய்யப்படாத குழுவினராக இருக்கும் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. (அதாவது குக்கர் சின்னம் கோரிக்கை நிராகரிப்பு) ஆனால், காலத்தைக் கருத்தில் கொண்டு 40 நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கும், இடைத்தேர்தல் சந்திக்கும் 19 வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒரு பொதுச்சின்னம் ஒதுக்க முடிவு செய்ய வேண்டும்.

மேலும் இதில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் அனைவரும் சுயேட்சை வேட்பாளர்களாகவே கருத வேண்டும்.

இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பைத்தான் இனி வரும் காலங்களில் முன்னுதாரணமாக யாரும் எடுக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் முறையீடு செய்தது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x