Last Updated : 25 Mar, 2019 05:20 AM

 

Published : 25 Mar 2019 05:20 AM
Last Updated : 25 Mar 2019 05:20 AM

‘15 லட்ச ரூபாய் எங்கே என்று கேளுங்கள்’- கர்நாடகாவில் மஜத எம்எல்ஏ பேச்சுக்கு பாஜக தலைவர் எடியூரப்பா கண்டனம்

மக்களவைத் தேர்தலில் மோடிக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வரும் பாஜகவினரின் கன்னத்தில் அறைந்து, 15 லட்ச ரூபாய் எங்கே? என்று கேளுங்கள் என பேசிய மஜத எம்எல்ஏ சிவலிங்க கவுடாவுக்கு எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரன் பிரஜ்வல், மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவரை ஆதரித்து அக்கட்சியின் அரிசிக்கெரே எம்எல்ஏ சிவலிங்க கவுடா ஹாசனில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரச்சாரத்தின் போது சிவலிங்க கவுடா பேசிய வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், “பிரதமர் நரேந்திர மோடி, நான் ஆட்சிக்கு வந்தால் சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் மீட்பேன். நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன். படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுப்பேன். விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை உருவாக்கி, அவர்களை காப்பாற்றுவேன் என சரமாரியாக வாக்குறுதி அளித்தார். அதில் எதையும் அவர் நிறைவேற்றவில்லை.

500,1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததால் கோடிக்கணக்கான மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். விவசாயிகளும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். வங்கிகளின் வாசலில் நின்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து எந்த குற்ற உணர்வும் இல்லாமல் பாஜகவினர் 'மோடி வாழ்க' என முழக்கம் எழுப்பிக்கொண்டு வலம் வருகின்றனர்.

மோடிக்கு வாக்கு கேட்டு வரும் பாஜகவினரின் கன்னத்தில் நாலு அறைவிட்டு, மோடி வங்கியில் போடுவதாக சொன்ன 15 லட்ச ரூபாய் எங்கே? என்று தைரியமாக கேளுங்கள். கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இந்த தேர்தலில் எதற்கு வாக்களிக்க வேண்டும் என கேளுங்கள். மக்கள் அமைதியாக இருப்பதால் தான் அவர்கள் பொய் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்” என ஆவேசமாக பேசியுள்ளார்.

இதற்கு சமூக வலைத்தளங்களில் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கூறும்போது, “சிவலிங்க கவுடாவின் பேச்சு கடும் கண்டனத்துக்குரியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோடி வாக்கு கேட்டு வந்தால் கல்லெறியுங்கள் என மக்களை தூண்டிவிடும் வகையில் பேசினார். தற்போது கன்னத்தில் அறையுங்கள் என்கிறார். முதல்வர்குமாரசாமியின் ஆட்சியில் எம்எல்ஏக்கள் குண்டர்களைப் போல பேசிக்கொண்டிருக்கிறார்கள். பாஜகவினருக்கும், மோடிக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் பேசியுள்ள சிவலிங்க கவுடா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x