Last Updated : 24 Mar, 2019 04:08 PM

 

Published : 24 Mar 2019 04:08 PM
Last Updated : 24 Mar 2019 04:08 PM

வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடக் காரணம் என்ன?- எந்த அளவுக்கு பாதுகாப்பானது?

கேரளாவின் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டால், அடுத்த சில நாட்களில் நாட்டின் விவிஐபி மக்களவைத் தொகுதியாக வயநாடு மாறிவிடும்.

ஆனால், வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட சம்மதித்து விட்டதாக கேரள காங்கிரஸ் வட்டாரங்கள் கூறினாலும், இன்னும் காங்கிரஸ் தலைமையிடம் இருந்து அதிகாரபூர்வமான தகவல் ஏதும் இல்லை.

கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில்தான் ராகுல் காந்தி போட்டியிட்டு வென்று வருகிறார். கடந்த முறை ராகுல் காந்தியை எதிர்த்து ஸ்மிருதி இரானி போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில், இந்த முறையும் ஸ்மிருதி இரானி ராகுல் காந்தியை எதிர்த்து களமிறங்குகிறார்.

இந்நிலையில், 2-வது தொகுதியாக, கர்நாடக மாநிலத்திலும், கேரளாவின் வயநாட்டிலும் ராகுல் காந்தி போட்டியிடலாம் என்று தகவல் வெளியானது. அதில் குறிப்பாக வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட சம்மதம் தெரிவித்துவிட்டதாக கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தாலும், இன்னும் காங்கிரஸ் தலைமையிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் இல்லை. இது ஓரிருநாட்களில் உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

பல்வேறு மாநிலங்களில் பல மக்களவைத் தொகுதிகள் இருந்தபோதிலும் கேரளாவின் வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்யக் காரணம் என்ன கேள்வி எழுவது இயல்புதான். அதற்கு பதில் ஒன்றுதான். காங்கிரஸ் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் பாதுகாப்பான தொகுதி என்பதுதான் முக்கியக் காரணம்.

தொகுதி சீரமைப்பு செய்யப்பட்டபோது கடந்த 2008-ம் ஆண்டு வயநாடு மக்களவைத் தொகுதி பிரிக்கப்பட்டது. இதில் வயநாடு மாவட்டம், மணன்தாவாடி, சுல்தான்பத்தேரி, கல்பேட்டா, திருவம்பாடி, மலப்புரம் மாவட்டத்தில் எரநாடு, நிலம்பூர், வண்டூர் ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன. இந்த 7 சட்டப்பேரவை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வாக்கு வங்கி உண்டு. 5 தொகுதிகளில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனர்.

கடந்த 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஐ.ஷாநவாஸ் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளரைத் தோற்கடித்துள்ளார். ஆனால், எம்.பி. ஷாநவாஸ் காலமாகி ஓராண்டுகிவிட்டதால், காலியாக இருக்கிறது.

2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் கணக்கின்படி, வயநாடு தொகுதியில் 11 லட்சத்து 2 ஆயிரத்து 97 வாக்காளர்கள் இருந்தனர். ஷாநவாஸ் அதில் 4.10 லட்சம் வாக்குகள் அதாவது 49.86 சதவீத வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.ரஹ்மத்துல்லா 31.23 சதவீதம் வாக்குகள், அதாவது 2.57 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

அந்தத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட சி.வாசுதேவன் மாஸ்டர் 31,687 வாக்குகள், 3.85 சதவீதம் வாக்குகள் பெற்று 4-வது இடம் பெற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சி கே.முரளீதரன் 12 சதவீத வாக்குகள் 99,663 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார்.

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் ஷாநவாஸ் வென்றபோதிலும் கூட கடந்த 2009-ம் ஆண்டு வெற்றியைக் காட்டிலும் சற்று கடினமாக இருந்தது. ஷாநவாசுக்கும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் சத்யன் மோகேரிக்கும் இடையே 20 ஆயிரம் வாக்குகள்தான் வித்தியாசம் இருந்தது.

ஷாநவாஸ் 30.18 சதவீதம் வாக்குகள் அதாவது 3.77 லட்சம் வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் சத்யன் 3.56 லட்சம் 28.51 சதவீதம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

ஆனால், இந்தத் தேர்தலில் பாஜக சற்று முன்னேற்றம் கண்டு 3-ம் இடத்தைப் பிடித்தது. பாஜக வேட்பாளர் பி.ஆர்.ரஸ்மில்நாத் 80 ஆயிரத்து 752 வாக்குகள், 6.46சதவீத வாக்குகள் பெற்றார். சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு சதவீதம் வாக்குகள் பெற்றனர்.

ஆதலால், வயநாடு மக்களவைத் தொகுதி என்பது, காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் பாதுகாப்பான, வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் தொகுதி என்பதால், ராகுல் காந்தியை இங்கு போட்டியிட கேரள காங்கிரஸ் கட்சியினர் அழைத்துள்ளார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x