Published : 23 Mar 2019 05:19 PM
Last Updated : 23 Mar 2019 05:19 PM

நாங்கள் கலப்படம் என்றால் நீங்கள் மனச்சிதைவு நோயாளிகள்: மோடி, பாஜக மீது அகிலேஷ் யாதவ் காட்டம்

பெரிய பெரிய ஜனநாயகத் தலைவர்கள் பெயர்களையெல்லாம் உதிர்க்கும் பாஜகவும் அதன் தலைமையும் அந்தத் தலைவர்கள் வெறுத்து ஒதுக்கிய கொள்கையுடைவர்களை வழிபடுகின்றனர் ஏன் இந்த இரட்டை நிலை, மனச்சிதைவு நோய் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாகச் சாடியுள்ளார்.

 

ராம் மனோகர் லோஹியாவின் 109வது நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி தன் சமூகவலைத்தளப் பக்கத்தில், ‘டாக்டர் லோஹியாவைப் பின்பற்றுபவர்கள் என்று கூறிக்கொள்ளும் மகா கூட்டணி எதிர்க்கட்சிகள் அல்லது கலப்பட எதிர்க்கட்சிகள் லோஹியா எதிர்த்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போராடுகின்றனர். இது வக்ரோக்தியானதும் கண்டிக்கத்தக்கதுமாம்’ என்று சாடியிருந்தார்.

 

மேலும் இவர்களைப் பார்த்தால் ராம் மனோகர் லோஹியாவே பயந்து விடுவார் என்றும் லோஹியா ஒருமுறை கூறியது போல் காங்கிரஸ் ஆட்சியில் விவசாயம், தொழிற்துறை, ராணுவம் எதுவும் வளரவில்லை என்றும் மோடி சாடியிருந்தார்.

 

மோடி சுட்டிக்காட்டிய அதே இரட்டைத் தர்க்கத்தை பாஜக மீது சாற்றிய அகிலேஷ் யாதவ், “ஒரு விதத்தில் மகாத்மா காந்தி, பகத் சிங், சர்தார் படேல், டாக்டர் அம்பேத்கர், டாக்டர் லோஹியா ஆகியோரை தங்களுடன் இணைத்துக் கொள்கின்றது பாஜக, அதே வேளையில் இந்தத் தலைவர்கள் வெறுத்து ஒதுக்கிய அரசியல் தலைவர்களை வழிபடுகின்றனர், இது இரண்டு எதிரும் புதிருமான மனநிலை படைத்த மனச்சிதைவு நோய்க்கூறாகும்” என்று பதிலடி கொடுத்தார் அகிலேஷ் யாதவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x