Last Updated : 23 Mar, 2019 12:11 PM

 

Published : 23 Mar 2019 12:11 PM
Last Updated : 23 Mar 2019 12:11 PM

ஒய்எஸ்ஆர் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரூ.375 கோடிக்கும் அதிகமான சொத்து

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தனது வேட்புமனுத் தாக்கலின்போது, தனக்கு ரூ.375 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்துக்கு சேர்த்து சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்பட உள்ளது. ஏப்ரல் 11-ம் தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலில் 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதில் கடப்பா மாவட்டம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிடும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அந்த தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.375 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அசையும் சொத்துக்குள் ரூ.339 கோடியும், அசையா சொத்துக்குள் ரூ.35 கோடியும் இருப்பதாகக் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது, ஜெகன் தனக்கு ரூ.343 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

ஜெகன் மோகனின் மனைவி ஒய்.எஸ்.பாரதி ரெட்டிக்கு ரூ.124 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு ரூ.71 கோடி மதிப்புள்ள சொத்து இருந்த நிலையில், 5ஆண்டுகளில் ரூ.53 கோடி அதிகரித்துள்ளது. பாரதி ரெட்டிக்கு அசையும் சொத்துக்கள் ரூ.92 கோடிக்கும், அசையா சொத்துக்கள் ரூ.31 கோடிக்கும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.  அவர்களின்  பெயரில் ரூ.11 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன.

இதில் ஜெகன்மோகன் ரெட்டி தனக்கு சொந்தமாக எந்தவிதமான வாகனங்களும் இல்லை என்றும், கட்சித் தொண்டர்கள் குண்டுதுளைக்காத வாகனம் வாங்கி தன்னுடைய பெயரில் பதவு செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெகன்மோகன் ரெட்டி ரூ.317 கோடிக்கு முதலீடும், அவரின் மனைவி பெயரில் ரூ.62 கோடி முதலீடும் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.8.42 கோடிக்கு விவசாய நிலமும், வர்த்தகரீதியான கட்டிடம் ரூ.14.46 கோடி மதிப்பிலும்,  ஹைதராபாத்தில் ரூ.12 கோடியில் ஒரு வீடும் இருப்பதாக ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார்.

இதுதவிர வருமானவரித்துறையின் வழக்கில் ரூ.66.88 கோடி சொத்துக்களும், தனது மனைவி பெயரில் ரூ.6.78 கோடி சொத்துக்களும் வழக்கில் சிக்கி இருப்பதாக ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார். சிபிஐ வழக்கு, அமலாக்கப்பிரிவு வழக்கு, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு  என 31 வழக்குகள் ஜெகன்மோகன் ரெட்டி மீது உள்ளன.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x