Last Updated : 22 Mar, 2019 11:46 AM

 

Published : 22 Mar 2019 11:46 AM
Last Updated : 22 Mar 2019 11:46 AM

அமித் ஷா காந்திநகரில் போட்டியிட காரணம் என்ன?- அத்வானியை மார்க்கதர்ஷக் மண்டலுக்கு அனுப்பிய பாஜக: காங்கிரஸ் சாடல்

குஜராத் மாநிலம் காந்திநகரில் 6 முறை எம்.பியாக இருந்த எல்.கே. அத்வானிக்கு இந்த முறை சீட் வழங்காமல் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, " மார்க்தர்ஷக் மண்டலுக்கு முதல் ஆளாக எல்.கே.அத்வானியை வலுக்கட்டாயமாக அனுப்பிவிட்டார்கள்" என்று விமர்சித்துள்ளது.

வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் பல்வேறு மாநிலங்களில் போட்டியிடும் முதல் கட்ட 184 வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

இதில் பாஜக மூத்த தலைவரும், 91 வயதான எல்கே அத்வானிக்கு காந்திநகர் தொகுதியில் சீட் வழங்கப்படவில்லை. கடந்த 1998-ம் ஆண்டில் இருந்து அத்வானி இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். ஆனால், இந்த முறை அவருக்கு சீட்  வழங்காமல் அந்த தொகுதியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா போட்டியிட உள்ளார்.

பாஜக வளர காரணமானவர்

கடந்த 1990களில் பாஜக சார்பில் ரதயாத்திரை நடத்தி நாடுமுழுவதும் பெரும் ஆதரவு அலையை திரட்டியவர் எல்கே அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1991-ம் ஆண்டு தேர்தலில் காந்திநகரில்  அத்வானி போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு  1996-ம் தேர்தலில் காந்தி நகர் தொகுதியில் வாஜ்பாய் போட்டியிட்டு வென்றிருந்தார். அவர் உத்தரப்பிரதேசம் லக்னோ தொகுதிக்கு மாறியபின், 1998-ம் ஆண்டுமுதல் காந்திநகரில் போட்டியிட்டு அத்வானி வென்றுள்ளார்.

கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காந்திநகரில் போட்டியிட்ட அத்வானி, 4.83 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனால், காந்திநகர் தொகுதியில் இந்த முறையும் அத்வானி போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மறுக்கப்பட்டுள்ளது.

ஜோஷிக்கும் இல்லை?

அத்வானி மட்டுமல்லாமல் மூத்த தலைவர் பி.சி. கந்தூரி, கல்ராஜ் மிஸ்ரா, பகத்சிங் கோஷ்யாரி ஆகியோருக்கம் சீட் வழங்கப்படவில்லை. அதேபோல 2014-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வென்ற முரளி மனோகர் ஜோஷிக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

கடந்த முறை கான்பூர் தொகுதியில் முரளி மனோகர் ஜோஷி போட்டியிட்டு வென்ற நிலையில், இந்த முறை வயது மூப்பு காரணமாக, அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருமுறைகூட கூடாத மார்க்தர்ஷக் மண்டல்

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றி பெற்றவுடன் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் கட்சியில் உள்ள தலைவர்களுக்கு ஆலோசனை, வழிகாட்டுதல்  ஆகியவற்றுக்காக மூத்த தலைவர்கள் கொண்ட 'மார்க்தர்ஷக் மண்டல்' குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் அப்போது மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,  அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இடம் பெற்றனர்.

ஆனால், இந்த 'மார்க்தர்ஷக் மண்டல்' அமைக்கப்பட்டதில் இருந்து ஒருமுறை கூட இன்னும் கூடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காங். விமர்சனம்

மூத்த தலைவர் அத்வானிக்கு சீட் வழங்காதது குறித்து காங்கிரஸ் கட்சி பாஜகவை விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நிருபர்களிடம் கூறுகையில், " மூத்த தலைவர் அத்வானிக்கு சீட் வழங்காமல் அவர் நீண்டகாலமாக போட்டியி்ட்ட காந்திநகர் தொகுதி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது.  மார்க்தர்ஷக் மண்டல் குழுவுக்கு முதல் ஆளாக எல்.கே. அத்வானியை வலுக்கட்டாயமாக பாஜக அனுப்பிவிட்டது.

மூத்த தலைவர்களை பிரதமர் மோடி மதிக்காதபோது, ஏன் மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கப் போகிறார். பாஜகவிடம் இருந்து நாட்டை  பாதுகாப்போம் " எனத் தெரிவித்துள்ளார்.

காந்திநகரில் ஏன் அமித் ஷா போட்டி?

குஜராத் மாநிலம், காந்திநகர் மக்களவைத் தொகுதியில் 17.33 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். காந்தி நகர் வடக்கு, கலோல், சனாந்த், காட்லோடியா, வேஜல்புர், நாரான்பூரா, சபர்மதி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

 பாஜக சார்பில் நிற்கும் வேட்பாளர்கள் இங்கு கடந்த 1989-ம் ஆண்டுக்குப்பின் தோற்றதே கிடையாது. அந்த அளவுக்கு பாஜகவின் கோட்டையாக திகழ்கிறது, வெற்றிக்கு உத்தரவாதம் கொண்ட பாதுகாப்பான தொகுதியாகும். அமித் ஷா ஏற்கனவே மாநிலங்களவை எம்.பியாக இருந்தபோதிலும் கூட, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்போது தோல்வி அடைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அதனால், பாஜகவின் பாரம்பரியதொகுதி, வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் தொகுதியான காந்திநகரில் போட்டியிட அமித் ஷா விரும்பி தேர்வு செய்துள்ளார்.

மேலும்,மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்ற பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் அமித் ஷ களமிறங்கியுள்ளார் என பாஜகவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பிரகதி அஹிர் கூறுகையில், " குஜராத்தில் ஏராளமான தொகுதிகளை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பாஜக தேசியத் தலைவர் காந்திநகரில் போட்டியிடுகிறார். கடந்த ஆண்டுதான் மாநிலங்களவை எம்.பியாக தேர்வான  அமித் ஷாவை காந்திநகரில் அவசரமாக போட்டியிட வைத்துள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x