Last Updated : 22 Mar, 2019 09:39 AM

 

Published : 22 Mar 2019 09:39 AM
Last Updated : 22 Mar 2019 09:39 AM

நானும் காவலாளிதான் கோஷத்தை பயன்படுத்தாதீர்கள்: பிரதமர் மோடியை கிண்டல் செய்த சத்ருஹன் சின்ஹா

நானும் காவலாளிதான் எனும் முழக்கத்தை பிரதமர் மோடி, முன்வைத்து பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அவ்வாறு தொடர்ந்து மோடி பேசுவது, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்துக்கு விடையளிக்கப்படாத கேள்விகளை மக்களுக்கு நினைவூட்டுவதாக அமையும் என்று பாஜஎம்.பி. சத்ருஹன் சின்ஹா பிரதமர் மோடியை கிண்டலுடன் விமர்சித்துள்ளார்

ரஃபேர் போர்விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் விமான உதிரிபாகங்கள் தயாரிப்பு ஒப்பந்தத்தை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு வழங்காமல், அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு பிரதமர் மோடி வழங்கிவிட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இதனால், காவலாளியே திருடிவிட்டார் என்று ராகுல் குற்றம்சாட்டி வருகிறார்.

பிஹாரின் பாட்னாசாஹிப் தொகுதி பாஜக எம்.பியான சத்ருஹன் சின்ஹா, பாஜகவில் இருந்தாலும், பாஜக தலைமையை கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் காங்கிரஸ் தலைமையிலான மகாகட்பந்தன் பேரணியிலும் பங்கேற்றார். பாஜகவின் நிர்வாகச் சீர்கேடுகள், நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும் சத்ருஹன் சின்ஹா பேசி வருகிறார்.

ஹோலி பண்டிகையான நேற்று, பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் வாழ்த்துக் கூறிவிட்டு, நானும் காவலாளி கோஷத்தை குறிப்பிட்டு பாஜக எம்.பி. சத்ருஹன் சின்ஹா ட்விட்டரில் கிண்டலுடன் கூடிய விமர்சனத்தை வைத்துள்ளார்.  

பிரதமர் மோடிக்கு(சார்ஜி) எனது ஹோலி வாழ்த்துக்கள். நான் உங்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால், 'நானும் காவலாளி' எனும் முழக்கத்தை தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால், எதிர்க்கட்சிகள் பேசிவரும்  'காவலாளியே திருடிவிட்டார்' என்ற கோஷத்தில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள இதைப் பயன்படுத்தினால், ரஃபேல் போர்விமான கொள்முதல் விவகாரத்தில் விடைதெரியாத பல கேள்விகளை மக்களுக்கு நினைவு படுத்திக் கொண்டே இருப்பதாக இருக்கும். அதற்கான  பதில் என்ன என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.

எந்தவிதமான முன்அறிவிப்பும் இன்றி, தயாரிப்பும் இன்றி, திடீரென 25 லட்சம் காவலாளிகள் முன் நீங்கள் உரையாற்றினீர்கள். அதுஎப்படி எந்த கணக்கும் இன்றி 25 லட்சம் காவலாளிகள், ஏன் 21 லட்சம், 22 லட்சமாக இருக்கக் கூடாதா. வறுமையில் உழன்றுவரும் காவலாளிகளும், மக்களும் நிச்சயம் பிரதமரின் இந்த பேச்சை ரசித்திருக்கமாட்டார்கள்.

வறுமையின் பிடியில் இருக்கும் இந்த லட்சக்கணக்கான மக்களிடம் நீங்கள் உங்களின் அலங்கார சொல்லாடலைப் பயன்படுத்தி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அதற்கு பதிலாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை  மேம்படுத்துவது, ஊதியத்தை அதிகரிக்கும் வழி, வறுமையை நீக்கும் வழி, சிறந்த ஊதியம் கிடைக்கும் வழி ஆகியவற்றைப் பற்றி பேசி இருக்கலாம். இவ்வாறு சத்ருஹன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

மோடியை கடுமையாக கிண்டல் செய்த சத்ருஹன் சின்ஹா, தனது ட்விட்டரில் முடிக்கும் போது, " இப்போதும் நீங்கள் இந்த தேசத்தின் மதிப்புக்குரிய  பிரதமர் நீங்கள், நான் இப்போதும் உங்களுடன்தான் இருக்கிறேன். ஹோலி பண்டிகை அன்பும், வண்ணங்களும், வாழ்த்துகளும் கலந்ததாக இருக்க வேண்டும் " எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x