Published : 16 Mar 2019 12:30 PM
Last Updated : 16 Mar 2019 12:30 PM

நியூஸிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு: தெலங்கானா நபர் கவலைக்கிடம்; மற்றொருவர் மாயம்

நியூஸிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். மற்றொருவர் மாயமானது தெரியவந்துள்ளது.

நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை அன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இதில் 49 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹைதரபாத்தைச் சேர்ந்த அகமது இக்பால் ஜஹாங்கீர் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்துள்ளார். 35 வயதான அவர் அங்கேயே ரெஸ்டாரன்ட் நடத்தி வந்தார். அதேபோல 31 வயது ஐடி பணியாளர் ஃபர்காஜ் அஸ்ஸன் எங்குள்ளார் என்று தெரியவில்லை. இவர் ஹனம்கொண்டா பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்,

இதில் ஜஹாங்கீரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெலங்கானா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜஹாங்கீரின் குடும்பத்தினர் 'தி இந்து'விடம் பேசும்போது, ''குடும்பத்தில் 9 சகோதரர்கள், 5 சகோதரிகளில் ஜஹாங்கீர்தான் கடைசி. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நியூஸிலாந்து சென்ற ஜஹாங்கீர், அங்கேயே ரெஸ்டாரன்ட் நடத்தத் தொடங்கி செட்டில் ஆகிவிட்டார்.

தாக்குதல் வீடியோவை யாரோ பகிர்ந்திருந்தனர். அதில் ஜஹாங்கீர் பச்சை சட்டை அணிந்தவாறே காயத்துடன் கீழே கிடந்தார். அவருக்கு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உதவி செய்தார். அவரை அல்லா ஆசிர்வதிக்கட்டும்'' என்றார்.

காயமடைந்த ஜஹாங்கீர், நியூஸிலாந்தின் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர். இவருக்கு 3 மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அதேபோல மாயமாகியுள்ள ஃபர்ஹஜ் அஸ்ஸனின் தந்தை மொகமது சயீதுதீன் தனது மகன் காணாமல் போய்விட்டதாகக் கூறியுள்ளார்.

இதற்கிடையே இவர்களுக்கு உதவக் கோரி முஸ்லிம் அமைப்புகள் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x