Last Updated : 12 Mar, 2019 11:35 AM

 

Published : 12 Mar 2019 11:35 AM
Last Updated : 12 Mar 2019 11:35 AM

ராகுல் காந்தி உண்மையான இந்துவா?- மீண்டும் சர்ச்சையாகப் பேசிய மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே

அரசியல் களத்தில் அடிக்கடி சர்ச்சையாகப் பேசி சிக்கலில் சிக்கும் மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே இப்போது ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ராகுல் காந்தி உண்மையான இந்துவா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலம் சிர்சியில் ஒரு நிகழ்ச்சியில் மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''ஒரு முஸ்லிம்(ராகுல் காந்தி) தன்னை எப்போதும் உண்மையான இந்து என்று அடிக்கடி சொல்லிக்கொள்கிறார். அவர் இந்து என்பதற்கு ஏதேனும், ஆதாரங்கள் இருக்கிறதா? முஸ்லிம் வழி தந்தைக்கும், கிறிஸ்துவ அம்மாவுக்கும் பிறந்த அவருக்கு இந்து என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. நான் நகைச்சுவைக்காகப் பேசவில்லை.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபின், அவரின் உடலின் பாகங்கள் மரபணு சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. அப்போது, ராஜீவ் காந்தியின் உடலின் மாதிரி பாகங்களை எடுத்துவர சோனியா, பிரியங்காவைத் தான் அனுப்பினார், ராகுலை அல்ல. இது ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதலால், கலப்பினமாக பிறந்த ஒருவர், பாலகோட்டில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கிறார். இதுதான் அந்தக் கட்சியின்(காங்கிரஸ்) குணம். அந்தக் கட்சியை எந்த இந்தியர்களும் தேர்தலில் வெற்றி பெற வைத்துவிடக்கூடாது''.

இவ்வாறு அனந்த குமார் ஹெக்டே  பேசினார்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் கார்வார் மாவட்டத்தில் அனந்த குமார் ஹெக்டே பேசுகையில், " ராகுல் காந்தியின் தந்தை ஒரு முஸ்லிம், தாய் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், எவ்வாறு அவர் இந்துவாக முடியும். அவருக்கு நாட்டைப் பற்றியும் தெரியாது, மதத்தைப் பற்றியும் தெரியாது. எப்படி பொய் சொல்கிறார் பாருங்கள் " எனப் பேசியிருந்தார்.

இதற்கிடையே ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் கோயிலுக்குச் சென்ற ராகுல் காந்தி, அப்போது கோயில் அர்ச்சகரிடம் தான் காஷ்மீர் கவுல் பிராமணர் என்றும், தன்னுடைய கோத்திரத்தையும் கூறினார். அதை விமர்சனம் செய்து அனந்தகுமார் ஹெக்டே பேசினார்.

இதுபோல் தொடர்ந்து சர்சைக்குரிய வகையில் பேசுவதை வாடிக்கையாக அனந்தகுமார் ஹெக்டே வைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அனந்தகுமார், இந்துப் பெண்ணைத் தொடுபவர்களின் கையை வெட்ட வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x