Published : 01 Mar 2019 06:38 PM
Last Updated : 01 Mar 2019 06:38 PM

அபிநந்தன் இந்தியா வருவதில் தாமதம்: இரவு 9 மணிக்கு ஒப்படைக்கப் படுகிறார்

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் அதிகாரிகள் அட்டாரி - வாகா எல்லையில் இந்தியா வசம் இரவு 9 மணிக்கு ஒப்படைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

முன்னதாக ஐ.ஏ.என்.எஸ்.  செய்தி நிறுவனத்தின் செய்திகளின் அடிப்படையில் இந்திய அதிகாரிகள் தெரிவித்ததாக அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் விங் கமாண்டர் அபிநந்தன் இன்னும் லாகூரில்தான் இருப்பதாகவும், இன்று இரவு 9.00 மணிக்கு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தற்போது அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தி அழித்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது.  அதில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் உயிருடன் கைது செய்தது.

இருநாடுகள் இடையே பதற்றம் சூழல் ஏற்பட்ட நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் சமரச முயற்சியில் ஈடுபட்டன. மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என மக்கள் அனைவரும்  ஒருமித்த குரலில் வலியுறுத்தினர். இதையடுத்து அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.

அபிந்தனை பாகிஸ்தானில் இருந்து விமானம் மூலம் அழைத்துவர மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து விட்டது. பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானம் பறக்க அனுமதி மறுத்துள்ள பாகிஸ்தான், அபிநந்தனை அடாரி-வாகா எல்லைவழியாக மட்டுமே அனுப்புவதாக தெரிவித்தது.

அதன்படி அபிநந்தனை அட்டாரி எல்லையில் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்தன. அபிநந்தனை வரவேற்க ஏராளமான மக்கள் அப்பகுதியில் கூடினர். மேளதாளங்கள் முழுங்க, தேசியக்கொடியை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.

ராவல் பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் இருந்த அபிநந்தன் லாகூர் வரை விமானத்தில் அழைத்து வரப்பட்டார். தற்போது அவர் லாகூரில் இருப்பதாகவும்  இரவு 9 மணியளவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

எல்லை வந்தபிறகு அங்கேயே அவருக்கு சிறிய அளவிலான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும் பின்னர் இருதரப்பு ராணுவ நடைமுறைகள் முடிந்தவுடன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x