Published : 27 Feb 2019 07:58 AM
Last Updated : 27 Feb 2019 07:58 AM

வேட்டையாடிய மிராஜ் விமானங்கள்

மிராஜ்-2000 விமானங்கள் ஒற்றை என்ஜின் கொண்டவையாகும். ஏராளமான வெடிகுண்டுகள், ஏவுகணைகளை செலுத்தவல்லது. மேலும் லேசர் வழிகாட்டுதலுடன் வெடிகுண்டுகளை வீசுவதற்கும் வல்லமை படைத்தவை.

இதில் பல இலக்குகளைத் தாக்கும் வசதி கொண்ட ரேடார் டாப்ளர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இலக்குகள் சரியாகத் தெரியாத நிலையிலும் இதன்மூலம் 100 சதவீத துல்லியத் தாக்குதலை நடத்த முடியும். நீண்ட தூர இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கும்.

இந்த வகை விமானங்கள் 1999 கார்கில் போரிலும் பயன்படுத்தப்பட்டன. இதனால் கார்கில் போரில் இந்தியா வெற்றி கண்டது. இதைத் தொடர்ந்து 2004-ல் கூடுதல் மிராஜ்-2000 விமானங்களுக்கு இந்தியா ஆர்டர் செய்தது.

2011-ல் மிராஜ்-2000 ரக போர்விமானங்களை மேம்படுத்த 220 கோடி அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கியது.

அனைத்து சீதோஷ்ண நிலைகள், குறைந்த உயரத்திலும் பறக்கவல்லது. ஒரு நிமிடத்துக்கு 60 ஆயிரம் அடி என்ற வகையில் தரையிலிருந்து வானில் உயரும் திறன் படைத்தவை இந்த விமானங்கள். பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனம் இதைத் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம்தான் ரஃபேல் போர்விமானங்களையும் தயாரிக்கிறது.

இரவிலும் துல்லியமாக பார்க்கும் வசதி, கூகுள் வசதியுடன் கூடிய காக்பிட் கண்ணாடிகள், மிகவும் முன்னேறிய வழிகாட்டுதல் வசதி என பல சிறப்பம்சங்களைக் கொண்டது.

14.36 மீட்டர் நீளமுள்ள இந்த விமானம், 7,500 கிலோ எடை கொண்டது. மேலும் 17000 கிலோ எடையைத் தூக்கிச் செல்லவல்லது.

இந்தியா தவிர பிரான்ஸ், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், தைவான், பெரு, கிரீஸ், பிரேசில் ஆகிய நாடுகளுக்கு மிராஜ் விமானங்களை தஸ்ஸோ நிறுவனம் வழங்கியுள்ளது. 30 ஆண்டுகள் செயல்படும் வகையில் மொத்தம் 583 விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

1971-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தானுடனான போருக்குப் பிறகு பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

பாகிஸ்தான்-இந்தியா போர் 1971-ம் ஆண்டு நடந்தது. அப்போது பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் இந்திய விமானங்கள் தாக்குதலை நடத்தின. அதன்பிறகு தற்போதுதான் பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று தாக்குதலை இந்திய விமானங்கள் நடத்தியுள்ளன. இந்தத் துல்லியத் தாக்குதலை மிராஜ்-2000 ரக விமானங்கள் நடத்தியுள்ளன. இலங்கையில் போர் நடந்தபோது இந்திய அமைதி காக்கும் படை (ஐபிகேஎப்) அங்கு சென்றிருந்தது. 1987-ல் இந்திய விமானங்கள் உணவுப் பொட்டலங்களை யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் போடப்பட்டன. அப்போது இந்திய விமானப் படையின் சரக்கு விமானத்துக்குப் பாதுகாப்பாக 4 மிராஜ்-2000 ரக விமானங்கள் சென்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x