Published : 27 Feb 2019 07:56 AM
Last Updated : 27 Feb 2019 07:56 AM

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை புறம்தள்ளி தீவிரவாதிகளின் கதையை முடித்த மோடி!

‘‘புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் உயிர் தியாகம் வீண்போகாது’’... இது கடந்த 14-ம் தேதி புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடியின் நாட்டுப்பற்றால் எழுந்த கோபாவேசமான பேச்சு. அதேபோல, சொன்னதைச் செய்துவிட்டார் மோடி. புல்வாமா தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தன் மீது பழி சுமத்தியபோதும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் காரியத்திலேயே கண்ணாக இருந்து பாகிஸ்தானையும் திசை திருப்பி விமானப் படை தாக்குதல் மூலம் 350 தீவிரவாதிகளை காலி செய்து மோடி பதிலடி கொடுத்துவிட்டார்.

விமர்சனங்கள்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மத்திய அரசே காரணம் என்றும் பாதுகாப்பில் கோட்டை விட்டது என்றும் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா மத்திய அரசுக்கு எதிராக முதல் கண்டனத்தைத் தெரிவித்தார். பின்னர் 4 நாட்களுக்கு முன் அவர் அளித்த பேட்டியில் தாக்குதல் சம்பவம் நடந்தது தெரிந்த பின்னரும் ஆவணப்படத்துக்கான ஷூட்டிங்கில் பிரதமர் மோடி  கலந்து கொண்டார் என்று குற்றம்சாட்டினார். அவர் சொல்வது தவறு என்று பாஜக ஆதாரத்துடன் விளக்கம் அளித்தது.

தாக்குதல் நடந்த பிறகு சூழ்நிலை குறித்து விவாதிக்க டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பெயரளவுக்கு ஆதரவு அளித்தன. அது பெயரளவிலான ஆதரவுதான் என்பது கூட்டத்துக்கு பின் பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவின் பேட்டியிலேயே தெரிந்தது. ‘‘புல்வாமா தாக்குதல் சம்பவத்தை வைத்து பாஜக அரசியல் ஆதாயம் அடைய முயற்சிக்கக் கூடாது’’ என்றார் டி.ராஜா.

இதைவிட, மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்னும் ஒருபடி மேலேபோய்விட்டார். ‘‘காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல் நடக்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு உளவுத் துறை மூலம் முன்கூட்டியே தகவல் தெரியும். இருந்தும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வீரர்கள் தாக்குதல் நடந்தால் அதைவைத்து மக்களவைத் தேர்தலில் ஆதாயம் அடையலாம் என்ற எண்ணம்தான்’’ என்று கூறி தாக்குதலை மோடியே ஆர்வத்துடன் எதிர்பார்த்தது போல கருத்து தெரிவித்தார்.

அப்போது எப்படி?

ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் மத்திய அரசோ, பாஜகவோ பெரிதாக பதிலளிக்கவில்லை. அதிலும் பிரதமர் மோடி இதுபோன்ற விமர்சனங்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு காரணம் இருந்தது. அவரது சிந்தனை எல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதிலேயே இருந்தது. எப்போது, எப்படி, எந்த வகையில் தாக்குதல் நடத்தலாம் என்று அவர் மனதுக்குள் திட்டம் ஓடிக் கொண்டே இருந்தது. மூத்த மத்திய அமைச்சர்கள், ராணுவ தளபதிகளுடன் தீவிரமாக அதே நேரம் ரகசியமாக ஆலோசனை நடத்தி வந்தார். பல நாட்களாக சுமார் 200 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனையின் வெளிப்பாடுதான் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானங்கள் நுழைந்து நடத்திய அதிரடி தாக்குதலில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட சம்பவம்.

இந்த தாக்குதலைக் கூட பாகிஸ்தான் கவனத்தை திசை திருப்பி வான் வழித் தாக்குதலை விமானப் படை மூலம் சாதுர்யமாக நடத்தியுள்ளார் மோடி.

காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் சுமார் 10 ஆயிரம் பேர் எல்லையில் குவிக்கப்பட்டனர். காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தரைவழி தாக்குதல் நடத்தப் போகின்றனர் என்று தகவல்கள் பரவின. பாகிஸ்தானும் இதை எதிர்பார்த்தது. அதனால், தங்கள் நாட்டு எல்லையிலும் பாகிஸ்தான் படைகளை குவித்தது.

சாணக்கியத்தனம்

இந்நிலையில், பாகிஸ்தான் மட்டுமல்ல, யாருமே எதிர்பாராத வகையில் பாகிஸ்தானின் கவனத்தை திசைதிருப்பி இந்திய ராணுவ விமானங்கள் பாகிஸ்தானில் நுழைந்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஒப்புதல் கொடுத்து சாணக்கியத்தனமாக செயல்பட்டுள்ளார் பிரதமர் மோடி. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் யூசுப் அசார் உட்பட அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் தியோபந்தில் உள்ள மதரசாவில் மாணவர்கள் அறையில் இருந்த 2 காஷ்மீர் தீவிரவாதிகள் கடந்த வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். கூகுள் பிளே ஸ்டோரில் இல்லாத அரிய செயலி மூலம் இவர்கள் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களை வைத்துதான் யூசுப் அசாரும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க முக்கிய தளபதிகளும் இருக்கும் இடத்தை அறிந்து நிஜமாகவே துல்லியமாக தாக்குதல் நடத்தி அவர்களின் கதையை முடித்துள்ளது விமானப்படை.

இதற்கிடையே, இந்த தாக்குதலால் கோபமடைந்துள்ள பாகிஸ்தானும் தீவிரவாதிகளும் காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கும் தயாராக முன்கூட்டியே மோடி திட்டமிட்டிருந்தார். அதனால்தான் எல்லைப் பகுதியில் கடந்த வாரம் 10 ஆயிரம் வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்டனர். எனவே, காஷ்மீரில் தாக்குதல் நடத்தினால் அதையும் சமாளிக்க தயாராக படைகள் இருப்பதன் பின்னணியில் உள்ளது பிரதமர் மோடியின் ராஜதந்திரம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x