Last Updated : 20 Feb, 2019 04:15 PM

 

Published : 20 Feb 2019 04:15 PM
Last Updated : 20 Feb 2019 04:15 PM

தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு நெருக்கடி அளிக்க வேண்டும் : சவுதி இளவரசரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு அனைத்து வகையான நெருக்கடிகளையும் அளிக்க   சவுதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளது என சவுதி இளவரசர், பிரதமர் மோடி இடையிலான பேச்சுக்கு பின்  மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவுக்கு வந்துள்ளார். மரபுகளை ஒதுக்கிவைத்த சவுதி இளவரசர் சல்மானை விமான நிலையத்துக்கே சென்று பிரதமர் மோடி வரவேற்றார். அதன்பின் குடியரசு தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை சவுதி இளவரசர் சல்மான் ஏற்றுக்கொண்டார்.

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரைச் சந்தித்து சவுதி இளவரசர் சல்மான் ஆலோசனை நடத்தினார். அதன்பின் பிரதமர் மோடி, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இடையே முறைப்படியான பேச்சு நடந்தது. அதன்பின் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

சவுதி அரேபியா மற்றும் இந்தியா இடையே நட்புறவை வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். புல்வாமாவில் கடந்தவாரம் நடத்தப்பட்ட கொடூரமான தீவிரவாத தாக்குதல், உலகம் முழுவதும் பரவியுள்ள தீவிரவாதத்தின் கொடிய அடையாளம். இது மனிதகுலத்துக்கே பேராபத்து என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

எந்தவகையிலும் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடாது, தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து வரும் நாடுகளுக்கு அனைத்து வகையான நெருக்கடிகளையும் அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தீவிரவாதத்துக்கு உதவி செய்தலையும், வசதிகள் செய்துகொடுத்தலையும் முடிவுக்கு கொண்டுவருதல், தீவிரவாதிகளுக்கு உதவுபவர்களைத் தண்டித்தல் குறிப்பாக இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவிடமாமல் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த விஷயங்களில் இந்தியாவுடன், சவுதிஅரேபியா ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சவுதி அரேபியா இளவரசர் வெளியிட்ட அறிக்கையில், " தீவிரவாதம், பயங்கரவாதம் பொதுவான  கவலையாக இருக்கிறது. எதிர்கால சந்ததியினர் நிம்மதியை உறுதி செய்யும் விதமாக, அவர்கள் பாதுகாப்பாக வாழும் வகையில் இந்தியா மற்றும் அண்டை நாடுகளுடன் சவுதிஅரேபியா ஒத்துழைக்கும். தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியாவின் நிலைப்பாட்டையும், முயற்சிகளையும் பாராட்டுகிறோம். இதற்காக இந்தியாவுடன் புலனாய்வு தொடர்பான தகவல்களை நாங்கள் பகிர்ந்துகொள்வோம். தீவிரவாதத்தை எதிர்க்கும் இந்தியாவின் முயற்சிக்கு துணை நின்று ஒத்துழைப்போம் " எனத் தெரிவிக்கப்பட்டது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x