Published : 20 Feb 2019 07:53 AM
Last Updated : 20 Feb 2019 07:53 AM

குரு ரவிதாஸ் பிறந்த பகுதியில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல்; சாதி பாகுபாட்டை ஒழிக்க வேண்டும்: வாரணாசி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

சமூக ஒற்றுமைக்கு சாதி பாகுபாடு தடையாக இருப்பதால், அதற்கு முடிவு கட்ட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

கடந்த 15 மற்றும் 16-ம் நூற்றாண்டின் பக்தி இயக்கத்தைச் சேர்ந்த துறவியும் கவிஞருமான குரு ரவிதாஸ் வாரணாசியில் பிறந்தவர். கீழ் சாதியில் பிறந்த இவரது பாசுரங்கள் மற்றும் பாடல் கள் மிகவும் புகழ் பெற்றவை. ரவிதாஸின் பிறந்த நாளை முன் னிட்டு, அவர் பிறந்த பகுதியில் வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:

சாதி ரீதியாக பாகுபாடு இருக்கக் கூடாது என குருஜி (ரவிதாஸ்) கூறி உள்ளார். சாதி பாகுபாடு இருக்கும் வரை மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள முடியாது, சம உரிமையை உறுதி செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.

சாதி பாகுபாடு சமூக ஒற்று மைக்கு தடையாக இருக்கிறது. எனவே, சுயநலத்துக்காக சாதி பாகுபாட்டை உருவாக்குபவர்கள் மற்றும் அதை ஊக்குவிப்பவர்களை அடையாளம் காண வேண்டும். சாதி பாகுபாட்டுக்கு முடிவுக் கட்ட வேண்டும்.

அனைவருடைய நலனையும் பாதுகாக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என குருஜி கனவு கண்டார். அவரது கனவை நனவாக்குவதற்காக, ‘அனைவரது வளர்ச்சிக்காக ஒன்றிணைவோம்’ என்ற முழக்கத்துடன் கடந்த நான்கரை ஆண்டுகளாக நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

ஆனால் எதிர்பாராதவிதமாக, சாதி பாகுபாட்டை இன்று வரை ஒழிக்க முடியவில்லை. ஆனால் இளைஞர்களின் உதவியுடன் இந்த மாற்றத்தை புதிய இந்தியா பார்க்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்தபடியாக வாரணாசியில் உள்ள டீசல் லோகோமோட்டிவ்ஸ் பணிமனையில், டீசல் இன்ஜினில் இருந்து மாற்றப்பட்ட முதல் மின்சார லோகோமோட்டிவ் இன்ஜினை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அந்த தொழிற்சாலையை அவர் பார்வையிட்டார். இதையடுத்து பிரதமர் மோடி பேசியதாவது:

நேர்மையாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தரும். இதைப் பின்பற்ற நாங்கள் முயற்சிக்கி றோம். பினாமி சொத்துகள் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏழை, நடுத்தர மக்கள் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, இலவச சமையல் எரிவாயு மற்றும் மின் இணைப்பு, ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு, முத்ரா யோஜனா திட்டம் மூலம் சிறுதொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.

மேலும் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் உள்ள தனி நபர்களுக்கு முழு வரிக் கழிவு வழங்கப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேர்மையானவர்கள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x