Published : 19 Feb 2019 06:02 PM
Last Updated : 19 Feb 2019 06:02 PM

112- அவசர கால உதவி எண்: 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அமல்

அவசர கால உதவி எண் '112'  16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அமலாக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஏராளமான நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதன்படி, ''அவசர உதவி ஆதரவு மையத்தின் (ERSS) ஓர் அங்கமான அவசர கால உதவி எண் '112' என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம், தாதர் நாகர் ஹவேலி, அகமதாபாத், உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இது அமலுக்கு வந்துள்ளது.

இந்த அவசர உதவி ஆதரவு மையத்தில் காவல் (100), தீயணைப்பு (101), மருத்துவம் (108), பெண்கள் (1090) ஆகிய பிரிவுகள் உண்டு. '112' என்ற ஒற்றை உதவி எண்ணின் மூலம் மேலே குறிப்பிட்ட சேவைகளைத் தொடர்பு கொள்ள முடியும்.

அவசர கால உதவி சேவைகளைப் பயன்படுத்த, பயனாளி ஒருவர் தன்னுடைய போனில் '112'-ஐ டயல் செய்யவேண்டும். அல்லது ஸ்மார்ட் போனின் பவர் பொத்தானை 3 முறை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.

சாதாரண போன் எனில் '5' அல்லது '9'-ஐ தொடர்ந்து அழுத்துவதன் மூலம் அவசர கால சேவையைப் பெறலாம்.

இணையம் வழியாக அவசர கால சேவையைப் பெற ERSS வலைதளத்தில் நுழைந்து மெயில் அனுப்பலாம். கூடுதலாக கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் உள்ள '112' இந்திய மொபைல் செயலியைப் பயன்படுத்தலாம்.

இந்த சேவை விரைவில் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வெவ்வேறு விதமான அவசர சேவைகளுக்கு '91' என்ற ஒற்றை எண் உள்ளதைப் போல இந்தியாவிலும் '112' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x