Last Updated : 17 Feb, 2019 10:52 AM

 

Published : 17 Feb 2019 10:52 AM
Last Updated : 17 Feb 2019 10:52 AM

இந்திய விமானப்படை பொக்ரானில் பகலிரவு பாராமல் மிகப்பெரிய ஒத்திகை: 140 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பங்கேற்பு

பாகிஸ்தான் எல்லைக்கு அருகேயும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் இந்திய விமானப்படை மிகப்பெரிய ஒத்திகையில் ஈடுபட்டது. பகலிரவு பாராமல் ஏராளமான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஏவுகணைகள், குண்டுகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டன.

புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்று ஒத்திகை குறித்து விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கு ராணுவத்துக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் எல்லைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ள பொக்ரான் பகுதியில் "வாயு சக்தி' என்ற பெயரில் இந்திய விமானப்படை நேற்று மிகப் பெரிய ஒத்திகையை நடத்தியது.

இந்த ஒத்திகைக்கு தரைப்படைத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி பி.எஸ். தனோவா, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இரவுபகலாக நடத்தப்பட்ட ஒத்திகை விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா கூறுகையில், " நம்முடைய அரசு உறுதியளித்துள்ளபடி, எந்தநேரத்திலும் தகுந்த பதிலடி கொடுப்பதற்காக இந்திய விமானப்படை தயாராகி வருகிறது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்திலும், இறையாண்மையை காப்பதிலும் இந்திய விமானப்படை தகுதியுடன் இருக்கிறது என்பதற்கு உறுதியளிக்கிறேன். ஏறக்குறைய 140 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஏவுகணைகள், நீண்டதொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றை வீசியும் பயிற்சியில்ஈடுபட்டு வருகிறோம் " எனத் தெரிவித்தார்.

இந்த வாயுசக்தி பயிற்சி குறித்து இந்திய விமானப்படை வட்டாரங்கள் தரப்பில் கூறுகையில், " முன்கூட்டியே திட்டமிடுவதற்காகவும், இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கவும் இந்த ஒத்திகையை நடத்துகிறோம்" எனத் தெரிவித்தனர்.

போர்விமானங்கள், போர்ஹெலிகாப்டர்கள் ஆகியவை பகலிரவாக ஒத்திகையில் ஈடுபட்டன. எஎல்எச் மற்றும் ஆகாஷ் வகை விமானங்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டன. எம்ஐஜி-29 போர் விமானங்கள், எஸ்யு-30, மிராஜ்2000, ஜாக்குவார், மிக்-21 பைசன், மிக்-27, மிக்-29, ஐஎல்78, ஹெர்குலஸ் ஏஎன்-32 விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டன.

இலகு ரக போர் விமானங்கள், தொழில்நுட்ப மேம்பாடு கொண்ட ஹெலிகாப்டர்கள், தரையிலிருந்து ஏவப்பட்டு விண்ணிலுள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட "ஆகாஷ்' ஏவுகணை, விண்ணிலுள்ள இலக்கைத் தாக்கி அழிக்க விண்ணிலிருந்து ஏவப்படும் "அஸ்திரா' ஏவுகணை, சிறிய ராக்கெட்டுகள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை இந்த ஒத்திகையின்போது விமானப்படை சோதித்தது.

மேலும், எஸ்யு-30, மிக்-27, எல்சிஏ தேஜாஸ், மிராஜ்-2000, ஹாக் ஆகிய போர்விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x