Published : 15 Feb 2019 05:30 PM
Last Updated : 15 Feb 2019 05:30 PM

புல்வாமா தாக்குதலைப் பாராட்டிய அலிகர் பல்கலை. மாணவர் இடைநீக்கம்; காவல்துறை வழக்கு பதிவு

புல்வாமா தாக்குதலைப் பாராட்டிய அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் மீது காவல்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது.

 

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்றபோது, அதன் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தார்.

 

இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 45  சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த 38 சிஆர்பிஎப் வீரர்கள், பாதாமிபாக் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

 

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சிகள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

இதனிடையே அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த பாசிம் ஹிலால் என்னும் மாணவர் புல்வாமா தாக்குதல் குறித்து, ''ஜெய்ஷ்- எப்படி? க்ரேட் #காஷ்மீர் #புல்வாமா'' என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும் சில ட்வீட்களையும் அவர் பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது.

 

காஷ்மீரின் பீர்வா பகுதியைச் சேர்ந்த ஹிலாலின் ட்வீட் பலத்த சர்ச்சைகளுக்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் அவரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனிடையே அலிகர் காவல்துறை அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 153ஏ மற்றும் 67ஏ ஆகியவற்றின் கீழ் ஹிலால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x