Last Updated : 14 Feb, 2019 12:51 PM

 

Published : 14 Feb 2019 12:51 PM
Last Updated : 14 Feb 2019 12:51 PM

டெல்லியில் அதிகாரம் யாருக்கு; துணை நிலை ஆளுர், முதல்வருக்கா?- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தலைநகர் டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா, அல்லது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இரு அமர்வு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

யூனியன் பிரதேசம் மற்றும் தலைநகர் டெல்லியில் உட்சபட்ச நிர்வாக அதிகாரம் யாருக்கு என்ற பிரச்சினை ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து தீவிரமடைந்தது. முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நிலவிவந்தன.

மத்தியில் ஆளும் கட்சி, டெல்லியிலும் ஆட்சி செய்யாத நிலையில், துணை நிலை ஆளுநருக்கும், டெல்லி அரசுக்கும் இடையே மோதல் வலுத்து வந்தது. நிர்வாக ரீதியாக உத்தரவுகளை டெல்லி அரசு பிறப்பித்தால், அதைத் தடை செய்வது, திட்டங்களைக் கொண்டுவந்தால் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது என பல்வேறு தடைகளைத் துணை நிலை ஆளுநர் ஏற்படுத்துகிறார் என்று டெல்லி ஆளும் அரசான ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.

இதையடுத்து, டெல்லி அரசில் உச்ச பட்ச அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பதை தீர்மானிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியஇரு நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்து, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைத்தனர்.

நீதிபதி ஏ.கே.சிக்ரி அளித்த தீர்ப்பில் கூறுகையில் " டெல்லியில் அரசில் இணைச் செயலாளருக்கு கீழாக இருக்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்தல், நியமித்தல் ஆகிய பணிகளை மட்டுமே டெல்லி அரசு செய்ய அதிகாரம் உண்டு. இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு மேல் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்தல், நியமித்தலை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அதற்கான பரிந்துரைகளை டெல்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு அளிக்கலாம்.

மேலும், மின்சாரத்துறை, வருவாய்துறை, அரசு நிர்வாகத்தில் மூன்றாம்நிலை மற்றும் அதற்குக் கீழ்நிலையில் உள்ள பணியாளர்களை மட்டுமே இடமாற்றம் செய்தல், நியமித்தலை மட்டுமே டெல்லி அரசு செய்ய முடியும். சில நேரங்களில் துணை நிலை ஆளுநருடன் ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கலாம்.

மக்களுக்கு அளிக்கும் சேவைகளைப் பொறுத்தவரை துணை நிலை ஆளுநர், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இணைந்து செயல்பட்டு நல்ல நிர்வாகத்தை அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் யாருக்கு அதிகாரம் இருப்பதை உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்புகிறோம்.

துணை நிலை ஆளுநரும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், மக்களுக்காகப் பணியாற்றுகிறோம் என்பதைக் கண்டிப்பாக உணர்ந்து செயல்பட வேண்டும். அதேசமயம், டெல்லி அரசுக்குத் தொடர்ந்து ஒத்துழைக்காமல் துணை நிலை ஆளுநர் செயல்படக்கூடாது " எனத் தெரிவித்தார்.

நீதிபதி அசோக் பூஷன் அளித்த தீர்ப்பில், " டெல்லியில் உள்ள அரசு எந்தவிதமான அதிகாரிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும், நியமிக்கவும் அதிகாரம் இல்லை. மத்திய அரசுக்கே அதிகாரம் இருக்கிறது. ஊழல் கண்காணிப்பு அமைப்பு துணை நிலை ஆளுநர் கட்டுப்பாட்டில்தான் இயங்க முடியும்.

விசாரணை ஆணையம் அமைத்தல், கட்டுப்படுத்துதல் போன்றவை மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. மேலும், டெல்லி அரசுக்குச் சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் உண்டு, நிலத்துக்குக் குறைந்தபட்ச மதிப்பையும் முடிவு செய்யலாம். மின்கட்டணத்தையும் முறைப்படுத்தலாம் " எனத் தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்பு குறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளர் சவுரவ் பரத்வாஜ் கூறுகையில், " டெல்லி மக்கள் தொடர்ந்து இனி சிரமப்படுவார்கள். துரதிர்ஷ்டமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவில்லாமல் இருக்கிறது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்து, சேவைகளைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் இரு நீதிபதிகளும் மூன்று நீதிபதிகள் அமர்வுக்குப் பரிந்துள்ளனர் " எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x