Published : 14 Feb 2019 08:03 AM
Last Updated : 14 Feb 2019 08:03 AM

அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.10 ஆயிரம்; மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ஸ்மார்ட்போன்: ஆந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைநகர் அமராவதியில் நேற்று நடைபெற்றது.

இதுகுறித்து அமைச்சர் கே. ஸ்ரீநிவாசுலு கூறியதாவது:

நாடு முழுவதும் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில் இந்தத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கும் மாநில அரசு சார்பில் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இதுபோல மாநிலத்தில் உள்ள 94 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் போன்களுக்கு 3 ஆண்டுகள் வரை அரசே ரீ சார்ஜ் செய்யும். மேலும், மாநில விவசாய மண்டலி ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் இருந்தபடி நேற்று காலையில் டெலிகான்பரன்ஸ் மூலம் கட்சி நிர்வாகிகளிடம் பேசியதாவது:

டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடத்தப்பட்ட அறப்போராட்டத்துக்கு நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. வரும் தேர்தலில் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியையும், மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியையும் நாம் விழ்த்த வேண்டும். சுமார் 40 ஆண்டுகளாக அரசியலில் உள்ள என் மீது சிறிய குற்றச்சாட்டு கூட இல்லை.

ஆனால், சிலர் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் குறித்து நான் வாய் திறந்தால், அவர்கள் தலை குனிந்துதான் நடக்க வேண்டி இருக்கும் என எச்சரிக்கிறேன். போலாவரம் அணைக்கட்டின் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த ஜெகன்மோகன் ரெட்டி முயற்சிக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x