Published : 11 Feb 2019 05:51 PM
Last Updated : 11 Feb 2019 05:51 PM

நாட்டின் முதல் இன்ஜின் இல்லாத அதிவேக ரயில் ‘வந்தே பாரத்’ - கட்டணம் எவ்வளவு?

பிரதமர் மோடி வரும் 15-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன.  

ரயில் பெட்டிகளின் கீழ் இன்ஜின் பொருத்தப்பட்ட புதிய வகை மின்சார ரயில் சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப்-ல் சமீபத்தில் தயாரிக்கப்பட்டது. ‘ரயில் 18’ என்று அழைக்கப்பட்ட இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது.

நாட்டின் மிக அதிவேக ரயிலான இதனை டெல்லி – மும்பை ராஜ்தானி வழித்தடத்தில் அதிகாரிகள் சோதித்துப் பார்த்தனர். இந்த ரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் பெயர் சூட்டினார்.

இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் வரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கிவைத்து உரையாற்ற உள்ளார். 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் டெல்லி – வாரணாசி இடையே இயங்கவுள்ளது. தற்போது இந்த வழித்தடத்தில் இயங்கி வரும் சதாப்தி எக்ஸ்பிரஸ் விலக்கிக் கொள்ளப்பட உள்ளது.

இந்த ரயிலில் பயணிகள் கட்டணம் எவ்வளவு என்ற விவரம் வெளியாகாமல் இருந்தது. அந்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருவிதமான வகுப்புகள் இடம் பெற்றுள்ளளன. இந்த வகுப்பில் கட்டணத்தை பொறுத்து உணவு உள்ளிட்ட இதர வசதிகளும் வேறுபடுகின்றன.

டெல்லியில் இருந்து  வாரணாசிக்கு இருக்கை வசதிக்கு 1,850 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேசமயம் எக்ஸிகியூட்டிவ் வகுப்பிற்கு 3520 ரூபாய் டிக்கெட் கட்டணம் ஆகும். மறு மார்க்கத்தில் வாரணாசியில் இருந்து டெல்லிக்கு இருக்கை வசதிக்கு 1795 ரூபாயும் எக்ஸிகியூட்டிவ் வகுப்புக்கு 3470 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருக்கை கட்டணத்தை பொறுத்தவரையில் சதாப்தி ரயில் கட்டணத்தை விட 1.5 மடங்கு அதிகமாகும். அதுபோலவே எக்ஸிகியூட்டிவ் வகுப்பு கட்டணத்தை பொறுத்தவரையில் பிரிமியம் ரயில்களில் முதல் வகுப்பு குளிர்சாதன கட்டணத்தில் இருந்து 1.4 மடங்கு அதிகமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x