Published : 06 Feb 2019 06:09 PM
Last Updated : 06 Feb 2019 06:09 PM

பிஷப்புக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகளுக்கு பாதுகாப்பு: கேரள முதல்வருக்கு பெண்கள் ஆணையம் கடிதம்

கேரள கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்,  பிஷப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தேசிய பெண்கள் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் தேவாலய பேராயர் பிராங்கோ மூலக்கல் மீது கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் கன்னியாஸ்திரியாக இருந்தவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.

புகார் குறித்துக் கூறிய கன்னியாஸ்திரி, கடந்த 2014-ல் கேரளத்தின் குருவிளங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லம் அருகே உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் வைத்து தன்னிடம் முதல் முறை அத்துமீறியதாகவும், பயத்தின் காரணமாக வெளியே சொல்லாமல் இருந்ததை பிராங்கோ பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறினார். மேலும் அவர் 13 தடவை தன்னிடம் அத்துமீறிய இடம், நேரம் என அனைத்துத் தகவல்களையும் காவல்துறையிடம் விளக்கியுள்ளார்.

2014 முதல் 2016 வரை நடைபெற்ற இச்சம்பவம் குறித்து கன்னியாஸ்திரி கொடுத்த புகாரின் பேரில் பேராயர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தங்கிய விடுதியில் இருந்த மற்ற கன்னியாஸ்திரிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக தற்போது  திருச்சபை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கன்னியாஸ்திரி லூசி கலப்புராவுக்கு ஃபிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் திருச்சபை எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியது. வேறு சிலருக்கு எதிராக இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிஷப் பிராங்கோ மூலக்கல்லுக்கு எதிராகவும் போராடிய ஐவரில் நால்வர், குருவிளங்காடு கான்வென்ட்டில் இருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டனர்.கன்னியாஸ்திரி அனுபமா கேலமங்கலது வெளியில் பஞ்சாப்பில் பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கன்னியாஸ்திரி அங்கிதா உரும்பில் கன்னூரில் உள்ள பரியாரம் பகுதியிலும் கன்னியாஸ்திரி ஆல்பி பல்லச்சேரில் பிஹாரில் பணிபுரிய வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டது. கன்னியாஸ்திரி ஜோசபைன் வில்லூன்னிக்கல் ஜார்கண்ட் செல்லப் பணிக்கப்பட்டார்.

பிஷப் தன்னைப் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டிய கன்னியாஸ்திரி உட்பட 5 பேர், தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி கேரள முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இந்த நிலையில் கன்னியாஸ்திரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் தேசிய பெண்கள் ஆணையம், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், ‘‘மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். எனவே தாங்கள் நேரடியாக தலையிட்டு அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாது இந்த வழக்கில் சாட்சியங்கள் கலைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாலும், தடயங்கள் அழிக்கப்படக்கூடும் என்பதாலும் கேரள அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x