Published : 05 Feb 2019 05:35 PM
Last Updated : 05 Feb 2019 05:35 PM

பழைய துணிகளும், மரக்கன்றுகளும்: மணமக்களின் நூதன திருமணப் பரிசு

பழைய ஆடைகளைத் திருமணப் பரிசாகக் கொண்டு வரும் விருந்தினர்களுக்கு அசாமைச் சேர்ந்த மணமக்கள் மரக்கன்றுகளை வழங்கி அசத்தியுள்ளனர்.

 

அசாமைச் சேர்ந்த மணமக்கள் பூபன் ரபா, பபிதா போரோ. இருவருக்கும் ஜனவரி 30-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது இவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் இடையே நடந்த பரிசுப் பரிமாற்றங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

பிப்ரவரி 1-ம் தேதி, இருவரின் திருமண வரவேற்பு நடைபெற்றது. அதில் 6000 விருந்தினர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் பழைய ஆடைகளைத் திருமணப் பரிசாகக் கொண்டு வந்த 350 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இவர்களின் திட்டத்தைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த பதாபரி சரக வன அலுவலர் 350 கன்றுகளை இலவசமாகக் கொடுத்திருக்கிறார்.

 

34 வயதான பூபன் கல்லூரிகளில் ஆங்கிலம் கற்பிக்கிறார்.  அசாமியப் படங்களில் நடித்திருக்கிறார். பபிதா தனியார் பள்ளி ஆசிரியை. இருவரும் 2012-ல் சந்தித்தபோது காதல் மலர்ந்துள்ளது.

 

இதுகுறித்துப் பேசிய பூபன், ''திருமணத்துக்கு முன்னதாக கிராமத்தில் இருக்கும் பெரியவர்களைச் சந்தித்துப் பேசினேன். பழைய ஆடைகளை வாங்கிக்கொண்டு மரக்கன்றுகளை வழங்கும் திட்டம் அவர்களுக்குப் பிடித்திருந்தது.

 

இந்த முன்னெடுப்பைத் தொடர உள்ளோம். திருமணத்துக்கு வந்த அனைத்து விருந்தினர்களுக்கும் ரிட்டர்ன் கிஃப்டாக மரக்கன்றுகளை வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம். அத்துடன் எங்களின் திருமணத்தன்று வீடில்லாத மக்கள் 10 பேருக்கு புதிய போர்வைகளைப் பரிசாக அளித்தோம்'' என்கிறார்.

 

சமூக சேவைக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உகந்த வகையில் பரிசுகள் பரிமாறப்பட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x