Last Updated : 05 Feb, 2019 04:27 PM

 

Published : 05 Feb 2019 04:27 PM
Last Updated : 05 Feb 2019 04:27 PM

மே.வங்கத்தில் நடப்பது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: பாஜக மீது சிவசேனா சாடல்

மேற்கு வங்கத்தில் நடக்கும் சம்பவங்கள் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகும். மக்களவைத் தேர்தலை வைத்து,  அரசியல் லாபத்துக்காகத் தொடர்ச்சியாக சில நடவடிக்கைகளை எடுக்கப்படுகின்றன என்று பாஜகவை கடுமையாகச் சாடியுள்ளது சிவசேனா கட்சி.

சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்கில் தொடர்புடைய கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை விசாரிக்க முறையான ஆவணங்கள் இன்றி சிபிஐ நேற்றுமுன்தினம் அவரின் வீட்டுக்குச் சென்றது. அப்போது, கொல்கத்தா போலீஸாருக்கும், சிபிஐக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சிபிஐ அதிகாரிகளை போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

இதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளின் அத்துமீறலைக் கண்டித்து, ஜனநாயகத்தைக் காப்போம் என்ற பெயரில் முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நடந்து வரும் சம்பவங்களை குறிப்பிட்டு சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான 'சாம்னா'வில் தலையங்கம் எழுதியுள்ளது. அதில் குறிப்பிட்டு இருப்பதாவது:

கொல்கத்தாவில் நடந்து வரும் சம்பவங்கள் அனைத்தும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடியவை. கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிராகக் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அதேபோல, கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் அவரின் வீட்டுக்குச் செல்லும் முன், முறையான சம்மன் கொண்டு சென்றிருக்க வேண்டும்.

சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்கில் தொடர்புடைய யாரையும் விட்டுவைக்கக் கூடாது, தப்பவிடக்கூடாது. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளாக சிபிஐ அமைப்பு இந்த விஷயத்தை எப்படி பார்த்தது, ஏன் இந்த அளவுக்குத் தீவிரமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் நிலவும் சிக்கல்களை நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருந்து பார்க்க வேண்டும், பாஜகவின் தலைவராக இருந்து பார்க்கக் கூடாது.

வரும் மக்களவைத் தேர்தலில் வடஇந்தியா முதல் மகாராஷ்டிரா வரை 100 இடங்கள் குறைவாகத்தான் கிடைக்கப்போகிறது. இந்த இடைவெளியே நிரப்பும் வகையில், மே.வங்கத்தில் 15 இடங்களைக் கைப்பற்ற பாஜக திட்டமிடுகிறது. அனைத்தும் மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் இடையே நடக்கும் போர். இந்த அனைத்து விஷயங்களும் வரும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து நிகழ்த்தப்படுகிறது.

மேற்கு வங்கத்துக்கு பாஜக தலைவர் அமித் ஷா வருகையில் இருந்து பாஜகவுக்கும், மம்தாபானர்ஜிக்கும் இடையே மோதல் தொடங்கியது. அடுத்ததாக, உ.பி. முதல்வர் ஹெலிகாப்டர தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. அதனால், வேறுவழியின்றி, தொலைப்பேசி மூலம் கூட்டத்தில் ஆதித்யநாத் பேசினார். அடுத்ததாக சிபிஐ, போலீஸார் மோதல் நடக்கிறது.

எங்களுக்கும், மம்தா பானர்ஜிக்கும், அவரின் கட்சிக்கும் இடையே ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், உண்மையில் மத்திய அரசுக்கு அதற்கு ஈடான வகையில் மம்தா பதிலடி கொடுத்து வருகிறார்

இவ்வாறு சிவசேனா கட்சித் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x