Last Updated : 05 Feb, 2019 02:13 PM

 

Published : 05 Feb 2019 02:13 PM
Last Updated : 05 Feb 2019 02:13 PM

செருப்புடன் ஒரு செல்ஃபி!- குவியும் பாராட்டு; புகைப்படக்காரரைத் தேடுகிறது பாலிவுட்

சமீப நாட்களாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் ஒரு சிறுவன் தன் கையில் செருப்பை மாட்டிக் கொண்டு அதை செல்ஃபோனாக பாவித்து செல்ஃபி எடுக்க முயல பின்னால் ஐந்தாறு சிறுவர்கள் செல்ஃபிக்கு போஸ் கொடுக்கும் ஃபோட்டோ ஒன்று படு வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் இப்போது பாலிவுட் பிரபலங்களால் அதிகம் பகிரப்பட்டு அதிகம் விவாதிக்கப்பட்டும் வருகிறது.  பாலிவுட் படத் தயாரிப்பாளரும் பிரபல ஃபேஷன் புகைப்படக்காரருமான அடுல் கஸ்பேகர் தனது ட்விட்டரில் இப்படத்தைப் பகிர்ந்ததே அதற்குக் காரணம்.

அடுல் கஸ்பேகர், கிங்ஃபிஷர் காலண்டருக்கான மாடல்களைப் படம் பிடித்து பிரபலமானவர்.

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தப் படத்தை நான் இங்கு பகிரக் காரணம் குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற மகிழ்ச்சி. அதை என்னை நெகிழச் செய்துவிட்டது. அந்தப் புகைப்படத்தில் அவர்கள் எந்த அளவு புன்னகையை வெளிப்படுத்தியிருந்தார்களோ அதே அளவு என்னையையும் புன்னைகைக்கச் செய்துவிட்டார்கள். 

படத்தில் இருக்கும் அழகுக் குழந்தைகளையோ அல்லது அந்த புகைப்படத்தை எடுத்தவரையோ யாரேனும் அடையாளம் காட்ட முடியுமா? அவர்கள் அனைவருக்குமே தனித்தனியாக நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், "மன்னிக்கவும். இந்தப் படம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். படத்தில் செருப்பை வைத்திருப்பவரின் கை அவரது உடல் அளவுடன் ஒத்துப்போவதாக இல்லை. அந்தச் சிறுவனின் இன்னொரு கையளவையும் இதையும் ஒப்பிட்டால் வித்தியாசமாக இருக்கிறது" எனப் பதிவிட்டார்.

அதேவேளையில் நடிகர் அனுபம் கேர், "ஒரு விஷயம் சிறப்பாக அமைய அதனை சிறப்பாக அணுக வேண்டும் என்ற வாழ்க்கை தத்துவத்தற்கான உதாரணம் இந்த புகைப்படம். அப்பாவதித்தனமும் அழகும் ததும்புகிறது" எனப் பதிவிட்டார்.

நடிகர் போமன் இராணியும் இந்தப் படத்தைப் பகிர்ந்து கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர், "உங்கள் மகிழ்ச்சி நீங்கள் தேர்வு செய்வதைப் பொருத்தே அமைகிறது. இது அனைவருக்கும் பொதுவானது. இந்த செல்ஃபி மற்ற எந்த செல்ஃபியைவிடவும் அதிகமான விருப்பங்களைப் பெறத் தகுதியானது" எனப் பதிவிட்டிருக்கிறார்.

அந்த செல்ஃபியில் சிறுவன் கையில் செல்ஃபோன் பிடித்திருக்கும் செருப்பும் கூட்டத்தில் போஸ் கொடுக்கும் மற்றொரு சிறுவன் ஒற்றைக் காலில் மாட்டியிருக்கும் செருப்பும் ஒரே மாதிரியாக இருப்பதால் இது உண்மையான படமே என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x