Published : 05 Feb 2019 02:12 PM
Last Updated : 05 Feb 2019 02:12 PM

பெண்களின் கைகளை வெட்டவேண்டும்- சபரிமலை குறித்து சர்ச்சையாகப் பேசிய கொல்லம் துளசி கைது

 

 

சபரிமலைக்குள் பெண்கள் செல்வது குறித்து சர்ச்சையாகப் பேசிய கொல்லம் துளசி, கொல்லத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.

 

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கேரளாவில் யாத்திரை நடத்தப்பட்டது.

 

கடந்த அக்டோபர் மாதம் நடந்த யாத்திரையில் கலந்துகொண்ட கேரள நடிகரும் பாஜக ஆதரவாளருமான கொல்லம் துளசி, ''சபரிமலைக்குள் நுழையும் பெண்களை இரு துண்டுகளாக வெட்ட வேண்டும். ஒரு பாதியை டெல்லிக்கும் மற்றொரு பாதியை திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்கும் அனுப்ப வேண்டும்.இங்கு எழுப்பப்படும் ஐயப்ப சரண கோஷம் பினராயி விஜயனின் காதுகளை எட்ட வேண்டும்'' என்று தெரிவித்தார்.

 

அதைத்தொடர்ந்து கேரள காவல்துறை அவரின் மீது வழக்கு பதிவு செய்தது. முன் ஜாமீன் கோரி துளசி,  கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் அவரின் மனுவை ரத்து செய்தது.

 

இதைத் தொடர்ந்து சுமார் 1 மாதம் கழித்து கொல்லம் மாவட்டத்தில் உள்ள சவரா காவல் நிலையத்தில் சரணடைந்தார் துளசி. அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக, ''ஐயப்பனின் மீதான ஆழ்ந்த பக்தியால், உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு பேசிவிட்டேன். நான் அப்படிப் பேசியிருக்கக்கூடாது. அதற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன்'' என்று துளசி மன்னிப்பு கோரியிருந்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x