Published : 04 Feb 2019 06:10 PM
Last Updated : 04 Feb 2019 06:10 PM

என் வாழ்க்கையையே இழக்கத் தயாராக உள்ளேன்; சமரசத்துக்கு இடமில்லை- மம்தா பானர்ஜி ஆவேசம்

என் வாழ்க்கையைக் கூட இழக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் சமரசம் செய்துகொள்ள மாட்டேன் என்று பாஜகவுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாகப் பேசியுள்ளார்.

 

மேற்கு வங்கத்தில் 'ரோஸ் வேலி', 'சாரதா சிட்பண்ட்ஸ்' ஆகிய இரு நிதி நிறுவனங்களில் நடந்த மோசடி தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜீவ் குமார் விசாரணை நடத்தினார். அவர் தற்போது கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருகிறார்.

 

நிதி நிறுவன மோசடி வழக்குகளை ராஜீவ் குமார் முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறப்பட்டதையடுத்து, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரிப்பதற்காகப் பலமுறை சிபிஐ சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை.

 

இந்நிலையில், ராஜீவ் குமாரை விசாரிக்க வேண்டும் என்று மேற்கு வங்க போலீஸாருக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தகவல் அளித்துவிட்டு, சிபிஐ அதிகாரிகளில் ஒரு பிரிவினர், ராஜீவ் குமார் இல்லத்துக்கு சென்றனர். அவர்களை அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, முறையான ஆவணங்கள் இருக்கிறதா எனக் கேட்டபோது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

பின்னர், சிபிஐ அதிகாரிகளை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில், கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் நேற்று இரவில் இருந்து முதல்வர் மம்தா பானர்ஜி, அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்' என்ற பெயரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

 

இதனிடையே மேற்கு வங்கம் மற்றும் கொல்கத்தா காவல்துறையின் நிகழ்ச்சியில் மம்தா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ''நீங்கள் (பாஜக) திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களை மோசடி வழக்கில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியபோது நான் வீதியில் இறங்கிப் போராடவில்லை. ஆனால் காவல்துறை அமைப்புக்குத் தலைமை வகிக்கும் கொல்கத்தா காவல்துறை கமிஷனரை அவமானப்படுத்த முயற்சித்தீர்கள். அதனால்தான் எனக்குக் கோபம் வந்தது. போராட்டத்தில் இறங்கினேன்.

 

இதற்காக என் வாழ்க்கையைக் கூட இழக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்'' என்றார் மம்தா.

 

இந்நிகழ்ச்சியில், கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரும் கலந்துகொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x