Published : 04 Feb 2019 04:28 PM
Last Updated : 04 Feb 2019 04:28 PM

ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் மம்தாவுக்கு ஆதரவளிக்க வேண்டும்: கனிமொழி

ஜனநாயகத்தின் மீதும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் அக்கறை கொண்டவர்கள் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

 

மேற்கு வங்கத்தில் 'ரோஸ் வேலி', 'சாரதா சிட்பண்ட்ஸ்' ஆகிய இரு நிதி நிறுவனங்களில் நடந்த மோசடி தொடர்பாக  கொல்கத்தா போலீஸ் கமிஷனரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  இரவில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். "நாட்டை, அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும்வரை எனது சத்தியாகிரகப் போராட்டம் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.

 

மம்தாவின் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் , மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவே கவுடா மற்றும் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேவா கட்சியின் ராஜ் தாக்கரே உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் மம்தாவுக்கு மாநிலங்களவை எம்.பி. கனிமொழி ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''ஜனநாயகத்தின் மீதும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் அக்கறை கொண்டவர்கள் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும். மாநில உரிமைகளை காக்க, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க மம்தா பானர்ஜி அவர்களின் போராட்டத்தை ஆதரிப்பது நம் கடமை'' என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x