Published : 04 Feb 2019 12:14 PM
Last Updated : 04 Feb 2019 12:14 PM

கிராமத்துப் பள்ளியில் ஆங்கிலத்தில் பாடம் நடத்தும் அமேசானின் அலெக்ஸா டீச்சர்

 

 

மற்ற நகராட்சித் தொடக்கப் பள்ளிகளைப் போல அல்லாமல், மகாராஷ்டிராவின் பட்னேரா பகுதியில் உள்ள வருடா ஆரம்பப் பள்ளியில், ஈராசிரியர்களோடு மூன்றாவதாக அமேசான் மெய்நிகர் உதவியாளரான (virtual assistant) 'அலெக்ஸா' பாடம் நடத்துகிறது.

 

( * விர்ச்சுவல் அசிஸ்டென்ட் என்பது நமக்குத் தேவையான தகவல்களை உருவமற்ற, கண்ணுக்குப் புலப்படாத ஓர் செயலியிடம் இருந்து  குரலின் மூலமாக கேட்டுப் பெற்றுக் கொள்வதாகும். உதாரணம்: ஆப்பிள் போனின் 'சிரி', கூகிளின் 'கூகிள் அசிஸ்டென்ட்' )

 

ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள மராத்தி வழியில் கற்பிக்கும் இப்பள்ளியில், 42 மாணவர்கள் படிக்கின்றனர். அமோல் புயர் என்னும் ஆசிரியரும் சுஷ்மா காப்சி என்னும் தலைமை ஆசிரியரும் உள்ளனர்.

 

விர்ச்சுவல் அசிஸ்டென்ட் அலெக்ஸா ஆங்கிலம், கணக்கு, கவிதை, பாடல்கள், பொது அறிவு, வானிலை உள்ளிட்ட ஏராளமான தகவல்களை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறது. பாடத்திட்டம் தாண்டி, பாலிவுட் இசையும் மாணவர்களுக்கு கூடுதலாகக் கற்பிக்கப்படுகிறது.

 

இதுகுறித்துப் பேசிய ஆசிரியர் அமோல், ''தொழில்நுட்பக் கண்காட்சி ஒன்றின்போது அலெக்ஸாவைப் பார்த்தேன். இது நிச்சயமாக மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் என்பதை உணர்ந்தேன்.

 

அமேசான் எக்கோ கருவி மூலம் அலெக்ஸாவை நானும் தலைமையாசிரியரும் சேர்ந்து வாங்கினோம். அத்துடன் துணிக் கடைகளில் இருப்பதைப் போன்று மனித உருவிலான பெண் பொம்மையையும் வாங்கினோம். அதன் வழியாக அலெக்ஸாவுக்கு உருவம் கொடுத்தோம்.

 

அடுத்தபடியாக ஒரு சவால் காத்திருந்தது. எங்களின் மாணவர்கள் மராத்தி மட்டுமே பேசுவார்கள். அலெக்ஸாவுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும். மெல்ல மெல்ல அலெச்ஸாவிடம் எப்படிக் கேள்வி கேட்க வேண்டும் என்று மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தோம். இப்போது எவ்விதத் தயக்கமும் இல்லாமல் மாணவர்கள் ஆங்கிலத்தில் கேள்விகளைக் கேட்கிறார்கள், அலெக்ஸாவின் பதில்களைப் புரிந்து கொள்கிறார்கள்.

 

அமெரிக்க ஆங்கிலத்தில் அலெக்ஸா பேசுவதை நாங்கள் விரும்பவில்லை. இதற்காக இந்திய உச்சரிப்பையும் பழக்கினோம். இந்தியா தொடர்பான வரலாற்று, அன்றாட நிகழ்வுகளையும் அலெக்ஸாவுக்கு சொல்லிக் கொடுத்தோம்.

 

க்ளியோ (Cleo) மூலம் இந்திய மொழிகளையும் அலெக்ஸாவுக்குச் சொல்லிக் கொடுத்தோம். இப்போது மாணவர்களின் கற்றல் திறனும் தொழில்நுட்பத்தைக் கையாளும் திறனும் வெகுவாக அதிகரித்துள்ளது'' என்று பெருமை பொங்கச் சொல்கிறார் ஆசிரியர் அமோல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x