Last Updated : 04 Feb, 2019 10:59 AM

 

Published : 04 Feb 2019 10:59 AM
Last Updated : 04 Feb 2019 10:59 AM

குடும்பத்தைக் கவனிக்க முடியாதவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சால் சலசலப்பு

குடும்பத்தைக் கவனிக்க முடியாதவர்களால், நாட்டை நிர்வகிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிதின் கட்கரியின் சமீபத்திய கருத்துகள் அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகளைத் தேர்தலில் அரசியல்வாதிகள் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று சமீபத்தில் கட்கரி பேசி இருந்தார்.

5மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 3 மாநிலங்களில் ஆட்சியை இழந்தது. அப்போது கருத்து தெரிவித்த கட்கரி தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்ததற்கு கட்சித் தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும் எனப் பேசியதும் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் கூட்டம் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் சனிக்கிழமை நடந்தது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது

என்னைச் சந்திக்கும் பல பாஜக தொண்டர்கள், தங்கள் வாழ்க்கையைக் கட்சிக்கும், நாட்டுக்கும் அர்ப்பணிப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

இப்படித்தான் நான் ஒரு பாஜக தொண்டரைச் சந்தித்தேன். அப்போது அவரிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், நான் சிறிய கடை ஒன்று நடத்தினேன். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், அந்தக் கடையை மூடிவிட்டேன் என்றார். அவருடைய குடும்பத்தைப் பற்றி கேட்டபோது, மனைவியும், ஒரு குழந்தையும் இருப்பதாகக் கூறினார்.

நான் அவரிடம் கூறினேன், முதலில் குடும்பத்தை நன்றாகக் கவனித்துக்கொள். ஏனென்றால், குடும்பத்தை நன்றாகக் கவனிக்க முடியாதவர்களால், நாட்டை நிர்வகிக்க முடியாது. ஆதலால், முதலில் உன்னுடைய குடும்பத்தை நன்றாகக் கவனி, குழந்தைகள் நலனில் அக்கறையாக இருங்கள், அதன்பின் கட்சியையும், நாட்டையும் கவனிக்கலாம் என்று தெரிவித்தேன் " எனப் பேசினார்.

அவரின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x