Last Updated : 04 Feb, 2019 09:43 AM

 

Published : 04 Feb 2019 09:43 AM
Last Updated : 04 Feb 2019 09:43 AM

தேசத்தைப் பாதுகாக்கும்வரை சத்தியாகிரகப் போராட்டம் தொடரும்: நள்ளிரவிலிருந்து முதல்வர் மம்தா பானர்ஜி உண்ணாவிரதம்

கொல்கத்தா போலீஸ் கமிஷனரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொல்கத்தாவில் நள்ளிரவில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் மம்தா பானர்ஜி "நாட்டை பாதுகாக்கும்வரை எனது சத்தியாகிரகப் போராட்டம் தொடரும்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் 'ரோஸ் வேலி', 'சாரதா சிட்பண்ட்ஸ்' ஆகிய இரு நிதி நிறுவனங்களில் நடந்த மோசடி தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜீவ் குமார் விசாரணை நடத்தினார். அவர் தற்போது கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருகிறார்.

நிதி நிறுவன மோசடி வழக்குகளை முறையாக விசாரிக்க வில்லை எனக் கூறப்பட்டதையடுத்து, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக விசாரிப்பதற்காகப் பலமுறை சிபிஐ சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை.

இந்நிலையில், ராஜீவ் குமாரை விசாரிக்க வேண்டும் என்று மேற்கு வங்க போலீஸாருக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று தகவல் அளித்துவிட்டு, சிபிஐ அதிகாரிகளில் ஒரு பிரிவினர், ராஜீவ் குமார் இல்லத்துக்கு சென்றனர். அவர்களை அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, முறையான ஆவணங்கள் இருக்கிறதா எனக் கேட்டபோது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், சிபிஐ அதிகாரிகளை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் நேற்று இரவில் இருந்து இரவு முதல்வர் மம்தா பானர்ஜி, அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்' என்ற பெயரில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நிருபர்களிடம் கூறுகையில், " நான் சாவதற்கு தயாராக இருக்கிறேன், ஆனால் ஒருபோதும் மோடி அரசுக்கு அடிபணியமாட்டேன். நாட்டில் அவசரநிலையை அமல்படுத்த நாங்கள் அனுமதிக்கமாட்டோம். தேசத்தை, ஜனநாயகத்தை, அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் வரையில் எனது சத்தியாகிரகப் போராட்டம் தொடரும்.

என்னுடைய இந்தப் போராட்டம் குறித்து உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் அழைத்துப் பேசினார்கள்.

இந்தத் தலைவர்கள் என்னைச் சந்திக்க வருவார்களா எனத் தெரியாது. அவ்வாறு யாரேனும் வந்தால், அவர்களை வரவேற்கிறோம். இந்தப் போராட்டம் எனது கட்சி நடத்தும் போராட்டம் அல்ல, எனது அரசு நடத்தும் போராட்டம். நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் நான் துணை இருப்பேன். நான் எந்த அதிகாரிகளுக்கும் எதிரானவர் இல்லை. அதனால்தான் சிபிஐ அலுவலகத்தைவிட்டு, மெட்ரோ ரயில்நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளேன்.

கடந்த 19-ம் தேதி எதிர்க்கட்சிகளை அழைத்து நான் நடத்திய கூட்டத்தினால்தான் இப்போது நாங்கள் பழிவாங்கப்படுகிறோம். மாநிலத்தில் வெற்றி பெற முடியாது என்று பாஜகவுக்கு தெரியும். அவர்களின் ஆட்சி முடியப்போகிறது.

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்றப் பார்க்கிறார்கள், இவர்களுக்கு அஜித் தோவல் உதவுகிறார். நான் இன்று நடக்கும் மாநில பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன். தேவைப்பட்டால், ஆலோசனை கூட்டம் இங்கு நடத்தப்படும் " எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக தவிர அனைத்துக் கட்சியைச் சேர்ந்த மேற்கு வங்கத்தில் உள்ள பிரமுகர்களும் முதல்வர் மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரும் மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x