Published : 04 Feb 2019 08:04 AM
Last Updated : 04 Feb 2019 08:04 AM

போலீஸ் கமிஷனரை விசாரிக்க சென்ற 5 சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தாவில் கைது

சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகளை மாநில போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதில் 5 சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இரு வழக்குகள் தொடர்பாக மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐஅதிகாரிகள் நேற்று அவரது வீட்டுக்கு சென்றனர்.

அப்போது கமிஷனரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் போலீஸார், சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். இதில் 5 சிபிஐ அதிகாரிகள்  கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரடியாக போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு வந்தார். அவர் தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்தது.

இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியபோது, ‘‘சிட்பண்ட் மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமாகி உள்ளன. இதுதொடர்பாக கமிஷனரிடம்  விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணி தொடர்கிறது’’ என்று தெரிவித்தன.

மம்தா ஆலோசனை

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் நேற்றிரவு போலீஸ் உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் மம்தா நிருபர்களிடம் கூறியதாவது:

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து கொல்கத்தாவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தினேன். இதன்காரணமாக மேற்குவங்கத்தை குறிவைத்து பழிவாங்கும் அரசியலில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்தார். இப்போது சிபிஐ ஏவிவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் கைலாஷ் விஜய்வர்ஜியா கூறியதாவது:

சிட் பண்ட் மோசடி வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யவிடாமல் மாநில போலீஸார் தடுக்கின்றனர். இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பு நடந்தது கிடையாது. மேற்குவங்கத்தில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x