Published : 29 Jan 2019 03:32 PM
Last Updated : 29 Jan 2019 03:32 PM

நடிகர்கள் நசிருதீன் ஷா, ஆமிர்கான் துரோகிகள்: ஆர்எஸ்எஸ் கடும் சாடல்

நடிகர்கள் நசிருதீன் ஷா மற்றும் ஆமிர்கான் ஆகியோர் துரோகிகள் என ஆர்எஸ்எஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

நம் நாட்டில் சிலர், போலீஸாரின் உயிர் பலியை விட பசுவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பதாக இந்தி நடிகர் நசிருதீன் ஷா விமர்சனம் செய்தார். யார் பெயரையும் குறிப்பிடாத அவர் தனது கருத்தை யுடியூப்பில் பதிவேற்றம் செய்தார். அதில் ‘‘எனது குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி நான் மிகவும் கவலைப்படுகிறேன்.

நல்லது எது? கெட்டது எது? என்பதை நாம் குழந்தைகளுக்கு கண்டிப்பாக கற்றுத் தருகிறோம். நம்பிக்கை என்றால் என்ன என்பதையும் போதிக்கிறோம். ஒருநாள் அவர்களை பெருங்கூட்டம் சூழ்ந்து நீ இந்துவா? முஸ்லீமா? என கேள்வி எழுப்பினால் அவர்களிடம் பதில் கிடையாது. இந்த நாடு எங்கள் வீடு. இங்கிருந்து யார் எங்களை விரட்ட முடியும்?’’ எனக் கூறி இருந்தார்.

நசிரூதீன்ஷாவின் இந்த கருத்து தேசிய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷெஹரில் பசுவதையை எதிர்த்து நடைபெற்ற கலவரத்தில் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் உள்ளிட்ட இருவர் பலியான பின்னணியில் அவரது கருத்தை சில வலதுசாரி அமைப்புகள் கடுமையாக விமர்சித்து போராட்டங்கள் நடத்தின.

இந்தநிலையில், நசிருதீன் ஷாவை ஆர்எஸ்எஸ் அமைப்பு மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் இந்த்ரேஷ் குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘பிரபல இந்தி நடிகர்கள் நசிருதீன் ஷா மற்றும் ஆமிர்கான் ஆகியோர் சிறந்த நடிகர்களாக இருக்கலாம். ஆனால் மரியாதைக்கு தகுதியில்லாத துரோகிகள் அவர்கள். ராஜபுத்திர அரசின் ஜெயசந்திரன் மற்றும் வங்காள நவாப் மீர் ஜாபர் போன்றவர்கள். முஸ்லிகள் அப்துல்கலாமை போல இருக்க வேண்டும். அது தான் இந்தியாவின் தேவை. தீவிரவாதி அஜ்மல் கசாப் போல அல்ல.

ராமர்கோயில் கட்டும் விவகாரம் தாமதமடைய முதல் காரணம் காங்கிரஸ். இரண்டாவது காரணம் இடதுசாரி கட்சிகள். சில மதவாத இயக்கங்கள் மூன்றாவது காரணம். சில நீதிபதிகள் 4வது காரணமாக அமைந்துள்ளனர்’’ எனக் கூறினார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x