Published : 29 Jan 2019 01:11 PM
Last Updated : 29 Jan 2019 01:11 PM

70% மக்களின் இறப்புக்குக் காரணமாகும் கேன்சர், நீரிழிவு, இதய நோய்கள்: உலக சுகாதார நிறுவனம்

தொற்று அல்லாத நோய்களான கேன்சர், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளால் உலகம் முழுவதும் 70% பேர் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் சுமார் 4.1 கோடி மக்கள் பலியாகின்றனர்.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், ''தென் கிழக்கு ஆசியப் பகுதியில், தொற்று அல்லாத நோய்களான கேன்சர், நீரிழிவு, இதயம் மற்றும் சுவாசம் தொடர்பான நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் 85 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

உலகளாவிய காய்ச்சல் தொற்று, பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு ஆகியவற்றால் நிகழும் இறப்புகளின் விகிதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் தொற்று அல்லாத நோய்களால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இறப்பவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு  70 வயதுக்கு முன்னதாக உள்ளது.

நான்கு அபாயகரமான பழக்கங்கள்

ஆபத்தான 4 பழக்கங்களால், கேன்சர், நீரிழிவு, இதயம் மற்றும் சுவாச நோய்கள் உண்டாகின்றன. அவை, புகையிலைப் பயன்பாடு, உடல்நலத்துக்கு ஒவ்வாத உணவுமுறை, போதுமான அளவு உடலியல் செயல்பாடுகள் இல்லாமை, அதீத மதுப்பழக்கம் ஆகியவை.

இவற்றால் ஏழை மக்களைவிட, பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் உடல் நலனைப் பாதுகாக்கும் விஷயத்தில் அதிக அக்கறை கொள்ள வேண்டியுள்ளது.

தொற்று அல்லாத நோய்களால்,  உலகம் முழுவதும் 70 % பேர் இறக்கின்றனர். குறிப்பாக ஆண்டுதோறும் சுமார் 4.1 கோடி மக்கள் பலியாகின்றனர். அதிலும் 30 முதல் 69 வயது வரை 1.5 கோடி பேர் எதிர்பாராத விதமாக உயிரிழக்கின்றனர்'' என்று உலக சுகாதார நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நார்ச்சத்து மிகுந்த உணவுகள், தானியங்கள்

இதைத் தடுப்பது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.கே.அகர்வால் கூறும்போது, ''நார்ச்சத்து மிகுந்த உணவுகள் மற்றும் தானியங்களை உட்கொள்வதன் மூலம் தொற்று அல்லாத நோய்களால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.

குறைவான உணவைச் சாப்பிடுங்கள், ரசித்து ருசித்து மெதுவாகச் சாப்பிடுங்கள். உங்களின் தட்டில் பாதிக்கும் மேல் பழங்களையும் காய்கறிகளையும் நிரப்பிக் கொள்ளுங்கள். தானியங்களை குறிப்பாக பயறு வகைகளை அதிகம் சாப்பிடுங்கள்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x