Last Updated : 29 Jan, 2019 12:35 PM

 

Published : 29 Jan 2019 12:35 PM
Last Updated : 29 Jan 2019 12:35 PM

அயோத்தியில் 67 ஏக்கர் நிலத்தை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அனுமதி: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம் ஜென்மபூமி பாபர் மசூதி பகுதியைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு பெற்றிருந்த நிலையில், அதை உண்மையான உரிமையாளர்களிடமே திரும்ப ஒப்படைக்க அனுமதி கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம் ஜென்மபூமி பாபர் மசூதி பகுதியான 2.77 ஏக்கர் நிலப்பகுதியைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை உரிமையாளர்களிடம் இருந்து மத்திய அரசு கடந்த 1991-ம் ஆண்டு வாங்கியது.

இந்நிலையில், 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தைச் சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அஹாரா, ராம் லாலா ஆகிய 3 குழுக்கள் சமமாக பிரித்துக்கொள்ள உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து 14 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அயோத்தி நில விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான அரசியல் சாசன அமர்வு விசாரணை வரும் இன்று (29-ம் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்துள்ளது.

5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதிகளில் நீதிபதி எஸ்.ஏ.பாப்தே 29-ம் தேதி வரமுடியாத சூழலில் இருப்பதால், விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் அறிவித்தார் ஆனால், அடுத்த விசாரணை எப்போது நடக்கும் என்பது குறித்து புதிய தேதி ஏதும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு புதிதாக ஒருமனுத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கடந்த 1991-ம் ஆண்டு, அயோத்தியில், சர்ச்சைக்குரிய ராம்ஜென்ம பூமி, பாபர் மசூதி அமைந்துள்ள 2.77 ஏக்கர் நிலப்பகுதியைச் சுற்றி 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு வாங்கி இருந்தது. அந்த நிலப்பகுதியை உண்மையான உரிமையாளர்களிடமே திருப்பி அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டு இருந்தது.

இதற்கிடையே 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு உண்மையான உரிமையாளர்களிடமே திரும்ப ஒப்படைக்க எடுத்திருக்கும் முடிவை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு வரேவற்றுள்ளது. இது குறித்து விஎச்பி அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கூறுகையில், " அயோத்தியில் அரசு வாங்கியுள்ள 67 ஏக்கர் நிலம் ராம் ஜென்மபூமி நயாஸ்க்கு உரிமையானது. அதில் எந்தவிதமான சட்டச்சிக்கலும் இல்லை. அதைத் திரும்ப ஒப்படைக்க அரசு முடிவு செய்திருப்பது வரவேற்றக்கூடியது, சரியான நடவடிக்கை " எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x