Published : 29 Jan 2019 12:39 PM
Last Updated : 29 Jan 2019 12:39 PM

ஆன்லைனில் ஏலம் விடப்படும் மோடியின் பரிசுப் பொருட்கள்; கிடைக்கும் தொகையைக் கொண்டு கங்கையைத் தூய்மைப்படுத்த திட்டம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாடுகளின் தலைவர்கள் அளித்த பரிசு பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன.

டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் ஏலம் நடைபெறுகிறது. ஓவியங்கள், சிற்பங்கள், இசைக் கருவிகள், சால்வைகள் என சுமார் 1,900 பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

முதல் நாள் ஏலத்தில் சத்ரபதி சிவாஜியின் சிலையின் ஆரம்ப விலை ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இது 22 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. புத்தர் சிலை, ஏழு குதிரைகள் அடங்கிய வெள்ளி வண்டிச் சிற்பம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களும் மகாத்மா காந்தி, விவேகானந்தர், சர்தல் வல்லபாய் படேல் உள்ளிட்ட பலரின் ஓவியங்களும் ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளன. 

கடந்த 27-ம் தேதி தொடங்கிய ஏலம், 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்றும் நாளையும் மின்னணு முறையில் ஏலம் நடைபெறுகிறது. ஆன்லைன் மூலம் ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவர்கள் pmmementos.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம். இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் மொத்தத் தொகையும் கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1986-ம் ஆண்டு கங்கை நடவடிக்கைத் திட்டத்தை காங்கிரஸ் அரசு அறிவித்த காலத்திலிருந்தே கங்கையை சுத்தம் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பிறகு ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்தும் கங்கை நதியைச் சுத்தம் செய்யும் விவகாரத்தில் வெற்றி அடைய முடியாத நிலையே உள்ளது.

இதனால் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, கங்கை நதியை சுத்தம் செய்யும் ‘நமாமி கங்கா’ திட்டத்துக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கியது. ஆனாலும் கங்கையைச் சுத்தப்படுத்தும் திட்டங்களில் முன்னேற்றம் இல்லை.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துபோது அந்த நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு அளித்த பரிசு பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டு, அத்தொகை கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x