Published : 24 Jan 2019 02:26 PM
Last Updated : 24 Jan 2019 02:26 PM

‘‘இத்தாலிக்கு திரும்பிச் செல்லுங்கள்’’ - ராகுல் காந்திக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

அமேதிக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திய விவசாயிகள் ‘‘இத்தாலிக்கு திரும்பிச் செல்லுங்கள்’’ எனக் கூறி கோஷம் எழுப்பினர்.

உத்தர பிரதேச மாநில அமேதி தொகுதி எம்.பியான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அங்கு சென்றார். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் அங்கு கவுரிகஞ்ச் என்ற இடத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்திலும் ராகுல் காந்தி பங்கேற்றார்.

அப்போது அமேதி தொகுதியைச் சேர்ந்த விவசாயிகள் திரண்டு ராகுல் காந்திக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற விவசாயிகள் பலர் ‘‘இத்தாலிக்கு திரும்பிச் செல்லுங்கள்’’ எனக் கூறி ராகுல் காந்திக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில் ‘‘தொழில் நிறுவனங்களை அமேதிக்கு கொண்டு வருவதாக கூறியும், எங்கள் குடும்ப இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக்கூறியும், ராஜீவ் காந்தி பவுண்டேஷன் அமைப்புக்கு நிலத்தை தருமாறு கூறினர்.

ஆனால் அவர்கள் கூறியபடி நடந்து கொள்ளவில்லை. ஒன்று அவர்கள் எங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் அல்லது நாங்கள் அளித்த நிலத்தை திருப்பி அளிக்க வேண்டும். ராகுல் காந்தி இங்கு இருப்பதை விட இத்தாலிக்கே திரும்பிச் செல்லலாம்’’ எனக் கூறினார்.   

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, 1980-ம் ஆண்டு ஜெயின் சகோதரர்கள் மூலம் அமேதியில் தொழிற்பேட்டை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜெயின் சகோதரர்களின் நிறுவனத்துக்காக 1986-ம் ஆண்டு உ.பி தொழில் வளர்ச்சி நிறுவனம் 65.57 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.

எந்த தொழிலும் தொடங்கபடாத நிலையில், கடன் வசூல் தீர்ப்பாயம் அந்த நிலத்தை கையகப்படுத்தியது. 2014-ம் ஆண்டு நிலம் ஏலத்தில் விடப்பட்டபோது, அதனை ராகுல் காந்தியின் ராஜீவ் காந்தி பவுண்டேஷன் விலை கொடுத்து வாங்கியது.

அந்த நிலத்தில் தொழில் தொடங்கி விவசாயக் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அங்கு தொழில் எதுவும் தொடங்கப்படாமல் நிலம் அப்படியே உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x