Last Updated : 23 Jan, 2019 06:08 PM

 

Published : 23 Jan 2019 06:08 PM
Last Updated : 23 Jan 2019 06:08 PM

பிரியங்காவின் அரசியல் நுழைவு: ராகுலை பிரதமராக்க காங்கிரஸ் இறக்கிய துருப்புச்சீட்டு?

பிரியங்கா வத்ராவின் அரசியல் நுழைவு, அவரது சகோதரர் ராகுலை பிரதமராக்க காங்கிரஸ் இறக்கிய துருப்புச்சீட்டாகப் பார்க்கப்படுகிறது. வரும் மக்களவை தேர்தலில் பிரியங்கா உ.பி. தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது.

 

‘புலி வருது,…’ கதையாக பிரியங்காவை முன்வைத்து,  ‘அரசியலில் நுழைகிறார்’, ‘வரும் தேர்தலில் போட்டியிடுகிறார்’ என அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இதை உண்மை என நிரூபிக்கும் வகையில் இன்று பிரியங்காவிற்கு, கட்சியில் பதவி அளித்து அதிகாரபூர்வமாக அரங்கேற்றப்பட்டு விட்டது.

 

1999-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சோனியா, பெல்லாரி மற்றும் அமேதி என இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த பிரச்சாரத்தில் முதன் முதலாக களம் இறங்கியவர் பிரியங்கா.

 

இவர், தன் தாய்க்காக பெல்லாரி தொகுதியில் அதிகமாக பிரச்சாரம் செய்திருந்தார். இதனால், தன்னை எதிர்த்து பாஜகவின் சார்பில் போட்டியிட்ட சுஷ்மா ஸ்வராஜை வென்றார் சோனியா.

 

அதன் பிறகு தேர்தல் பொறுப்பாளராக இருந்து தம் தாய்காக அமேதியில் பிரச்சாரம் செய்து வந்தார் பிரியங்கா. எனினும், அதையடுத்து வந்த மக்களவை தேர்தல்களில் அவர் களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

 

அவருக்கு முன்பாக யாரும் எதிர்பாரா வகையில் ராகுல் காந்தி 2004-ல் போட்டியிட்டாரே தவிர, பிரியங்கா வரவில்லை.

 

ராகுலுக்கும் சேர்த்து தேர்தல் பொறுப்பாளராக பிரச்சாரம் மட்டும் செய்தார்.

 

2009-ன் மக்களவை தேர்தலில் 21 பெற்ற காங்கிரஸுக்கு 2014-ல் இரண்டு தொகுதிகளே மிஞ்சின. அவை இரண்டும் அமேதியில் ராகுல் மற்றும் ராய்பரேலியில் சோனியாவின் தொகுதிகளாக இருந்தன.

 

இந்நிலையில், பிரியங்காவால் மட்டுமே உ.பி.யில் மூழ்கத் துவங்கி விட்ட காங்கிரஸை காக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அக்கட்சியின் தலைமையும் பிரியங்காவை கட்சிக்கு மிகவும் சிக்கலான சமயத்தில் ஒரு துருப்புச்சீட்டாகக் களம் இறக்கத் தருணம் பார்த்தது.

 

எனினும், தொடர்ந்து உ.பி. காங்கிரஸார் பிரியங்காவை அரசியலுக்கு வரும்படி வற்புறுத்தி வந்தனர். குறிப்பாக அலகாபாத் காங்கிரஸினர் பிரியங்கா அரசியலுக்கு வருவதாகக் குறிப்பிட்டு தம் தொகுதியில் சுவரொட்டிகளை அவ்வப்போது ஒட்டி சர்ச்சையை கிளப்பினர்.

 

இதில், ‘இந்திரா கி கூன் பிரியங்கா கமிங் சூன்(இந்திராவின் இரத்தம் பிரியங்கா விரைவில் வருகிறார்)’ எனக் குறிப்பிடப்பட்டு, அதில் இந்திரா காந்தி மற்றும் அவரது பேத்தியான பிரியங்காவின் படங்கள் பிரதானமாக இடம் பெற்றன.

 

இதுபோல், ஒவ்வொரு முறையும் அலகாபாத்தின் காங்கிரஸார் பிரியங்காவிற்கு ஆதரவாக சுவரொட்டிகளையும், பதாகைகளையும் பலவிதமாக வெளியிட்டனர். இதற்கு துவக்கத்தில் மறுப்பு வெளியிட்டு வந்த பிரியங்கா கடந்த வருடம் அமைதி காத்தார்.

 

ராய்பரேலியில் சோனியா விலகலா?

 

இதனிடையே, தன் உடல்நிலை கருதி சோனியா தம் தலைமை பொறுப்பில் இருந்து விலகி மகன் ராகுலை அமர்த்தி விட்டார். அடுத்து மாநிலங்களவை உறுப்பினராகி தம் ராய்பரேலி தொகுதியில் ராகுலை நிறுத்துவதாகவும் பேசப்படுகிறது.

 

அமேதியில் பிரியங்காவா?

 

இதன் தொடர்சியாக சோனியா வரும் மக்களவையில் போட்டியிட மாட்டார் எனவும், அவரது ராய்பரேலி தொகுதிக்கு ராகுல் மாறி விடுவார் என்றும் கூறப்படுகிறது. எனவே, அமேதியில் பிரியங்கா போட்டியிடும் வாய்ப்புகள் இருப்பதாக காங்கிரஸார் நம்புகின்றனர்.

 

காங்கிரஸின் கடைசி ஆயுதம்

 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் பிரதமர் வேட்பாளராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட உள்ளார். இவரை சமாளிக்க காங்கிரசிடம் இருக்கும் கடைசி ‘ஆயுதம்’ என பிரியங்கா என கட்சியினர் கூறி வந்தனர்.

 

ராகுலின் கோபம்

 

பிரம்மச்சாரியான ராகுல் காந்தி அரசியலில் வெளிக்காட்டக் கூடாத தன் கோபத்தை காட்டி விடுகிறார். அவர் பிரதமராக எடுபடுவது சந்தேகம் என கூறப்பட்டு வந்தது. இதனால், பிரியங்கா வாத்ரா களம் இறக்கப்படுவார் என்ற பேச்சு அடிக்கடி கிளம்பியபடி இருந்தது.

 

மாயாவதி-அகிலேஷ் அமைத்த கூட்டணி

 

இத்துடன், பாஜகவை எதிர்த்து தம் தலைமையில் எதிர்கட்சிகளின் ஒரே அணியாக அமைக்க காங்கிரஸ் முயன்றது. இதற்கு, மாயாவதியும், அகிலேஷ்சிங் யாதவும் கடந்த வாரம் உபியில் இணைந்து முற்றுப்புள்ளி வைத்தனர். காங்கிரஸ் ஒதுக்கியதுடன், அக்கூட்டணியின் பிரதமராக மாயாவதி முன்னிறுத்த முயற்சிக்கப்படுகிறார்.

 

பிரதமர் வேட்பாளராக மம்தா

 

சிலதினங்களுக்கு முன் திரிணமூல் காங்கிரஸ் கொல்கத்தாவில் எதிர்கட்சிகள் கூட்டத்தை கூட்டியது. இதன் பிறகு, எதிர்கட்சிகளின் கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக மேற்குவங்க முதல்வர் மம்தா பேசப்படுகிறார்.

 

பிரியங்காவின் தேவை

 

இந்தநிலை, தொடர்ந்தால் எதிர்கட்சி தலைவர்களில் மேலும் பலர் தம்மை பிரதமராக முன்னிறுத்தத் துவங்கும்

 

சூழல் உள்ளது. இதற்கு ராகுல் தான் எதிர்கட்சிகள் பிரதமர் என்பதை வலியுறுத்த காங்கிரஸுக்கு பிரியங்காவின் தேவை இருந்தது.

 

காங்கிரஸின் பிரதமர்

 

உபி உள்ளிட்ட சில மாநிலங்களில் தனித்தும் பலதில் கூட்டணி அமைத்தும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதில், அதிக தொகுதிகளை பெற்றால் தம் கட்சி சார்பில் பிரதமர் என வலியுறுத்தும். இதற்கு பாஜகவால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாமல் இருப்பது முக்கியம்.

 

இந்திரா காந்தியின் முக அம்சம், உடல்மொழி

 

பிரியங்கா தனது பாட்டியான இந்திரா காந்தியின் முகஜாடை மற்றும் உடல்மொழியை கொண்டுள்ளார். இதற்கு, உபிவாசிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பு உள்ளது. எனவே, அதை பயன்படுத்தி அரசியல் லாபம் எடுக்க காங்கிரஸ் சரியான தருணம் பார்த்து கொண்டிருந்தது.

 

நேரு குடும்பத்தின் சொந்த ஊரான அலகாபாத்தில் அவர் வாழ்ந்த ஆனந்த பவன் இல்லம் உள்ளது. இங்கிருந்து தன் தேர்தல் பிரச்சாரத்தை பிரியங்கா துவக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

காங்கிரஸின் உத்வேகம்

 

இதன்மூலம், தான் உபியை சேர்ந்தவர் என்பதை உணர்த்தி பிரியங்கா வாக்கு சேகரிக்க உள்ளார். கடந்த மாதம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில ஆட்சியை பாஜகவிடம் இருந்து பறித்தமையால், காங்கிரஸிடம் உத்வேகம் கிளம்பியுள்ளது.

 

இதை மக்களவை தேர்தல் வரை நிலைக்க வைக்க பிரியங்காவின் நுழைவு நல்ல பலன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x