Published : 23 Jan 2019 09:10 AM
Last Updated : 23 Jan 2019 09:10 AM

மம்தா ஆட்சியில் அரசியல் பெயரால் மக்கள் படுகொலை: பாஜக தலைவர் அமித்ஷா குற்றச்சாட்டு

மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் அரசியலின் பெயரால் மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் என்று பாஜக தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் மால்டாவில் நடந்த கூட்டத்தில் பாஜகவின் தேர்தல் பிரசாரத்தை கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

வரும் மக்களவைத் தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் மட்டுமின்றி மேற்குவங்கத்துக்கும் மிக முக்கியமான தேர்தல். ஜனநாயகத்தை படுகொலை செய்யும் திரிணமூல் காங்கிரஸ் அரசு தொடர வேண்டுமா, அல்லது தூக்கியெறியப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்யும் தேர்தலாக இருக்கும். முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் அரசியலின் பெயரால் மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். பாஜக மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் பாஜக நடத்த திட்டமிட்டிருந்த ரத யாத்திரைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி தடை விதித்துள்ளார். தோல்வி பயம் காரணமாகத்தான் பாஜக ரத யாத்திரைக்கு அவர் அனுமதி மறுத்துள்ளார். பாஜகவின் ரத யாத்திரையை வேண்டுமானால் மம்தா பானர்ஜி தடை செய்யலாம். ஆனால், மக்களின் மனங்களில் தாமரை மலர்வதை அவரால் தடுக்க முடியாது. மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அமையும். திரிணமூல் காங்கிரஸ் படுதோல்வியடையும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொடுத்ததைவிட மேற்கு வங்கத்துக்கான வளர்ச்சித் திட்டங்களுக்காக 2.5 மடங்கு அதிக நிதியை பாஜக தலைமையிலான மத்திய அரசு கொடுத்தது. அந்தப் பணத்தில் பாதியை ஊடுருவல்காரர்களும் மீதியை திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களும் எடுத்துக் கொண்டுவிட்டனர். ஊடுருவல்காரர்களை திரிணமூல் காங்கிரஸ் அரசு ஆதரிக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக் குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள் ளது. கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தங்கள் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளனர். கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு மேற்குவங்க மக்கள் முடிவுகட்டினர். அதேபோல, மம்தா பானர்ஜி ஆட்சிக்கும் மக்கள் முடிவுகட்ட வேண்டும்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x