Published : 21 Jan 2019 07:06 PM
Last Updated : 21 Jan 2019 07:06 PM

பெங்களூரு சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மோதல்: புகாரை ஏற்று வழக்குப்பதிவு

பெங்களூரு சொகுசு விடுதியில் தன்னை சக காங்கிரஸ் எம்எல்ஏ கணேஷ் தாக்கியதாக மற்றொரு எம்எல்ஏ அனந்த் சிங் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதை ஏற்று கணேஷ் மீது கர்நாடக போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் மேலிடம் அக்கட்சி எம்எல்ஏக்களை பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் கடந்த 3 தினங்களாக தங்க வைத்தது.

அமைச்சர் டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எங்கும் தப்பிச் செல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில், விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்களுக்கு காங்கிரஸ் எம்.பி. டி.சுரேஷ் நேற்று முன்தினம் இரவு விருந்து அளித்தார்.

இந்த விருந்து நேற்று அதிகாலை 4 மணி வரை நீடித்தது. இதில் மதுபானமும் பரிமாறப்பட்டதாக தெரிகிறது. அப்போது, நீண்டகால‌ நண்பர்களான காம்ளி தொகுதி எம்எல்ஏ கணேஷுக்கும், விஜயநகர் தொகுதி எம்எல்ஏ அனந்த்சிங்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், அங்கிருந்த பீர் பாட்டிலால் அனந்த் சிங்கை, கணேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அனந்த் சிங்கின் மண்டை உடைந்தது. இதையடுத்து, அவர் பெங்களூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன‌ர்.

இந்தச் சம்பவத்தை அமைச்சர் டி.கே.சிவகுமார் மறுத்தார். நெஞ்சு வலி காரணமாகவே அனந்த் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். மருத்துவமனையில் வீங்கிய முகத்துடன் ஆனந்த் சிங் படுத்திருக்கும் புகைப்படம் சில ஊடகங்களில் வெளியாகி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்குள் மோதல் நடந்தது உண்மைதான் என்பதை நிரூபித்துள்ளது.

இதனிடையே, மோதல் தொடர்பாக அனந்த் சிங் போலீஸில் புகார் அளித்தார். அதில் ‘‘தேர்தலின் போது நிதி உதவி செய்யவில்லை என்ற கோபத்தில் கணேஷ், ரிசார்ட்டில் தங்கியிருந்தபோது வழிமறித்து வாக்குவாதம் செய்தார். அங்கிருந்து நான் செல்ல முற்பட்டபோது என்னை வழிமறித்து தாக்கினார்.

எனது உறவினர்களை கொன்று விடுவதாக மிரட்டினார். மேலும் எனது கை, கால், தலை, கண் என அனைத்து பகுதிகளிலும் சரமாரியாக தாக்கினார். இதல் நான் பலத்த காயமடைந்தேன். என்னை தாக்கிய கணேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார். இந்த புகாரை ஏற்ற கணேஷ் மீது கர்நாடக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x