Last Updated : 15 Jan, 2019 04:52 PM

 

Published : 15 Jan 2019 04:52 PM
Last Updated : 15 Jan 2019 04:52 PM

ஆட்சி கவிழுமா?- கர்நாடக ஆளும் காங்.ஜேடிஎஸ் அரசுக்கு ஆதரவில்லை: 2 எம்எல்ஏக்கள் திடீர் வாபஸ்

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திடீரென இரு எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றதாக இன்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

சுயேட்சை எம்எல்ஏ எச் நாகேஷ், கேபிஜேபி கட்சியைச் சேர்ந்த ஆர். சங்கர் ஆகியோர் தங்களின் முடிவைக் கடிதம் மூலம் ஆளுநர் வாஜுபாய் வாலாவுக்கு தெரிவித்துள்ளனர். தற்போது இந்த இரு எம்எல்ஏக்களும் மும்பையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க இருக்கின்றனர். தாங்கள் கூட்டணி அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டதால், அடுத்த கட்ட நடவடிக்கையை ஆளுநர் எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கோரியுள்ளனர்.

முதல்வர் எச்.டி.குமாரசாமி கூறுகையில், “ கர்நாடக ஆளும் அரசுக்கு 2 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றதால் எந்தக் கவலையும் இல்லை. நான் மிகவும் பதற்றமில்லாமல் இருக்கிறேன். என்னுடைய அரசின் பலம் எனக்குத் தெரியும்” எனத் தெரிவித்தார்.

ஆளும் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்டி. தேவேகவுடா விளக்கம் அளித்துள்ளார்.

அவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், “ காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆட்சியைக் கவிழ்ப்பது யாருடைய கைகளிலும் இல்லை. அதுபோல் எந்தச் சூழலும் ஏற்படாது, ஏனென்றால் அது கடவுளின் கைகளில் இருக்கிறது. எங்களின் 38 எம்எல்ஏக்களும், தேசியக் கட்சியான காங்கிரஸின் ஆசியுடன் உள்ளதால், ஆட்சி கவிழ்வதற்கு வாய்ப்பில்லை.

காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி குழப்பத்தில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் வதந்திகளைப் பரப்புகிறார்கள். ஆனால், எந்த நிலையற்றதன்மையும் அரசுக்கு இல்லை. கடவுளின் ஆசியுடன் நிலையான ஆட்சியைத் தரும்.

நாங்கள் பாஜக எம்எல்ஏக்களுக்கு பணமும், பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறி இழுப்புதாகப் பேசுகிறார்கள். இவ்வாறு பேசுவது ஒரு தேசியக் கட்சிக்கு அழகல்ல. எதற்காக 104 எம்எல்ஏக்களையும் பதுக்கி வைத்திருக்க வேண்டும்.

எங்கள் எம்எல்ஏக்கள் ஒற்றுமையாக வீட்டில் இருக்கிறார்கள். நாங்கள்யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. காங்கிரஸ் கட்சியும் கவலைப்படத் தேவையில்லை “ எனத் தெரிவித்தார்.

கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு தற்போது 104 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. ஆட்சி அமைக்க 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பதால், அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை வளைக்கும் வேளையில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

பாஜக எம்எல்ஏக்கள்சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய மாநாட்டில் பங்கேற்க கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி சென்றனர். கர்நாடகாவில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்திற் கொண்டு டெல்லி அருகே உள்ள குருகிராம், நொய்டாவில் உள்ள ஓட்டல்களில் பாஜக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தரப்பில் பாஜக எம்எல்ஏக்களை இழுக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டி ருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x