Last Updated : 15 Jan, 2019 04:45 PM

 

Published : 15 Jan 2019 04:45 PM
Last Updated : 15 Jan 2019 04:45 PM

மக்களவைத் தேர்தலுக்காக உ.பி.யில் காங்கிரஸ் தீவிரம்: பிப்ரவரி முதல் ராகுலின் 13 மெகா பிரச்சாரக் கூட்டங்கள்

மாயாவதி-அகிலேஷ் சிங் யாதவின் கூட்டணில் விலக்கி வைக்கப்பட்ட ராகுல் உ.பி.யில் மக்களவைத் தேர்தலில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் 13 பிராந்தியங்களில் மெகா பிரச்சாரக் கூட்டங்களை பிப்ரவரி முதல் தொடங்குகிறார்.

மத்தியில் பாஜகவின் தலைமையில் ஆளும் அரசு மீண்டும் அமையாமல் இருக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டின. இதற்காக அனைவரும் ஒன்றுகூடத் தொடங்கியவர்கள் இடையே 'யார் பிரதமர்?' என்பதில் திடீர் எனப் பிரிவினை ஏற்பட்டது.

இதில், உ.பி.யின் 80 தொகுதிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் 38, அகிலேஷின் சமாஜ்வாதி 38 மற்றும் அஜீத்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் 2 என கூட்டணி அமைத்தனர். மீதியுள்ள இரண்டில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுலுக்காக மரியாதை நிமித்தம் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டது.

இதனால், காங்கிரஸ் உ.பி.யின் 80 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளது. தன்னுடன் மதச்சார்பற்ற கட்சிகள் சேர முன்வந்தால் வரவேற்பதாகவும் அறிவித்திருந்தது. இந்நிலையில், ராகுல் உ.பி.யின் 13 இடங்களில் தீவிரப் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார். இவை உ.பி.யில் காங்கிரஸ் பிரிக்கப்பட்டுள்ள 13 பிராந்தியங்களிலும் அமைந்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ''முதல் கூட்டம் லக்னோவிலும், இரண்டாவதாக பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியிலும் நடைபெற உள்ளது. மற்ற இடங்கள் பிறகு முடிவு செய்யப்படும்'' எனத் தெரிவித்தனர்.

காங்கிரஸின் நம்பிக்கை

மாயாவதியும், அகிலேஷும் சேர்ந்து காங்கிரஸை தனிமைப்படுத்தியது தவறு எனவும் காங்கிரஸார் கருதுகின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் தம் கட்சி நிச்சயமாக அதிக தொகுதிகளை அள்ளும் எனவும் நம்புகின்றனர்.

ராகுல் கருத்து

இது குறித்து வெளிநாட்டில் பேட்டி அளித்த ராகுல்,  ''நான் கூறுவது தவறாகவும் இருக்கலாம். காங்கிரஸின் மதிப்பு குறித்து மாயாவதியும், அகிலேஷும் தவறாகக் கணித்து விட்டனர். இதற்காக நாம் சோர்ந்து விடாமல் போட்டியில் தீவிரம் காட்டுவோம்'' எனத் தெரிவித்தார்.

மும்முனைப்போட்டி

கடந்த மாதம் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைத்தது முதல் காங்கிரஸ் உற்சாகமடைந்துள்ளது. எனினும், இந்த சூழலில் உ.பி.யில் உருவாகி வரும் மும்முனைப்போட்டி பாஜகவிற்கு சாதகமாகும் ஆபத்தும் நிலவுகிறது.

2014 தேர்தல் முடிவுகள்

கடந்த 2014 மக்களவையில் பாஜக 71 அதன் கூட்டணியான அப்னா தளம் 2, சமாஜ்வாதி 5 மற்றும் காங்கிரஸ் 2 பெற்றிருந்தன. மாயாவதியின் பகுஜன் சமாஜுக்கு ஒரு இடம் கூடக் கிடைக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x