Last Updated : 12 Jan, 2019 05:59 PM

 

Published : 12 Jan 2019 05:59 PM
Last Updated : 12 Jan 2019 05:59 PM

நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக எங்கள் அரசு தான் ஊழல் இல்லாதது- பிரதமர் மோடி பெருமிதம்

நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு அரசு மீது  எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாதது தற்போது ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மட்டும்தான் என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்தார்.

பாஜகவின் தேசிய மாநாடு டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். கட்சியின் மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள்,முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று ள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த 2004 முதல் 2014-ம் ஆண்டுவரை ஆண்ட அரசு நாட்டை பெரும் இருளில் தள்ளியது, ஊழலும், லஞ்சமும் பெருக்கெடுத்தது என்று சொல்வதில் தவறில்லை.

நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாகப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு ஒன்று ஊழல் குற்றச்சாட்டில் சிக்காமல் இருப்பது இதுதான் முதல்முறையாகும். அதுவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மட்டுமே. நம்மீது எந்தவிதமான ஊழல் கறையும் இல்லாமல் இருப்பதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.

கடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்காக நாங்கள் பல்வேறு முயற்சிகளை, நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். ஆனால், பெண் குழந்தைகளை காப்போம் என்ற திட்டத்தை எதிர்க்கட்சிகள் தவறாக சித்தரிக்கின்றன. தவறான நம்பிக்கைகளை உடைத்தெறிய பல ஆண்டுகள் கடந்து வந்திருக்கிறோம்.

கடந்த 60 ஆண்டுகளில் வங்கிகள் சார்பில் ரூ.18 லட்சம் கடனும், காங்கிரஸ் கட்சியின் கடைசி 6 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் கோடியும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒரு விதமான கடன் மக்களுக்காகவும், மற்றொரு விதமான கடன் காங்கிரஸ் கட்சி தங்களின் தேவைப்பட்டோருக்காகவும் வழங்க வங்கிகளை நிர்பந்தப்படுத்தி இருக்கிறது.

ஊழலை ஒழிப்பதற்காக நாங்கள் வலிமையான அரசு நமக்குத் தேவை. ஆனால், மகா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் சேர்ந்து உருவாக்கும் கூட்டணி தோல்வி அடையும் முயற்சியாகும். அனைவரும் ஒன்று சேர்ந்து யாருக்கும் உதவாத அரசைஅமைக்க முயற்சிக்கிறார்கள். வலிமையான அரசு அமைந்தால், அவர்கள் தங்களின் கடைகளை மூட வேண்டியது வரும் என்பதால், அவர்களுக்கு அது தேவையில்லை.

ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் சிபிஐ அமைப்பை தங்கள் மாநிலத்துக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. தவறுகளையும், விதிமுறைகளுக்கு மாறாகவும் செய்துவிட்டு ஏன் சிபிஐ அமைப்புக்கு அச்சப்படுகிறார்கள். இன்று சிபிஐ அமைப்பைத் தடை செய்பவர்கள் நாளை ராணுவம், போலீஸார், தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம், மத்திய தலைமைத் தணிக்கையாளர் எனப் பலவரையும் அனுமதிக்க மறுப்பார்கள்.

குஜராத்தில் நான் முதல்வராக இருந்தபோது, நான் விரைவில் சிறைக்குச் செல்வேன் என்று கடந்த 2007-ம் ஆண்டு காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் கூறினார். ஆனால், நான் ஒருபோதும் குஜராத் மாநிலத்துக்குள், சிபிஐ அமைப்பை அனுமதிக்க நான் தடைவிதிக்கவில்லை.

அயோத்தி வழக்கில் எந்தவிதமான தீர்வும் கிடைக்காமல் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தனது, வழக்கறிஞர்கள் மூலம் தாமதப்படுத்தி வருகிறது.

கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் உயர்சாதியில் பொருளாதாரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்துள்ளது புதிய இந்தியாவுக்கான நம்பிக்கையை உருவாக்கும். இந்த புதிய ஏற்பாடு ஒருபோதும் யாருடைய உரிமையையும் பறிக்காது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x