Published : 11 Jan 2019 05:34 PM
Last Updated : 11 Jan 2019 05:34 PM

உ.பி.யில் காங்கிரஸுக்கு 2 தொகுதிகள் தான்: அகிலேஷ் திட்டவட்டம்

உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம், ஆனால் காங்கிரஸுக்கு 2 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க வாய்ப்பில்லை என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக நாடுமுழுவதும் வலிமையான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கு முன்னோட்டமாக, உத்தரபிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த பகுஜன் சமாஜும், சமாஜ்வாதியும் மக்களவை தேர்தலுக்காக கைகோத்துள்ளன.

உத்தர பிரதேசத்தில் கடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக கூட்டணி 73 இடங்களில் வென்று பெரும் சாதனை படைத்தது. எனவே வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டுமென்றால் வலிமையான கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்காக சிறு சிறு கட்சிகளையும் தங்கள் அணியில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்தக் கூட்டணியில், அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம்(ஆர்எல்டி) சேர்வது உறுதியாகியுள்ளது. தற்போது, உத்தரபிரதேச மாநில அமைச்சராக இருக்கும் சுஹல் தேவ், பாரதிய சமாஜ் கட்சியின் (எஸ்பிஎஸ்பி) தலைவர் ஓம் பிர காஷ் ராஜ்பர் ஆகியோர் பாஜக கூட்டணியில் இருந்து விலகி சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியில் இணைகின்றனர்.

சோனியா காந்தி யின் ரேபரேலி மற்றும் ராகுல் காந்தியின் அமேதி ஆகிய 2 தொகுதி களை மட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது என காங்கிரஸ் கூறி வருகிறது.

சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 37 தொகுதிகளில் போட்டியிடும் எனத் தெரிகிறது. காங்கிரஸ் உட்பட மற்ற கட்சிகளுக்கு 6 தொகுதிகளை பிரித்து தர முடிவு செய்துள்ளன. தொகுதி உடன்பாட்டை காங்கிரஸ் ஏற்கவில்லை என்றால், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் மட்டும் கூட்டணி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தாமல் 78 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த அகிலேஷ் யாதவும், மாயாவதியும் முடிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில், தங்கள் கூட்டணியை இறுதி செய்து நாளை அறிவிக்க சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கன்னோஜ் நகரில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்,

ஆனால் காங்கிரஸுக்கு 2 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க வாய்ப்பில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யாக உள்ள அமேதியிலும், சோனியா காந்தி எம்.பி.யாக உள்ள ரேபரேலியிலும் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை. மற்ற தொகுதிகளில் நாங்கள் திட்டமிட்டபடி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். இரண்டு தொகுதிகளை ஏற்று காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்’’ எனக் கூறியுள்ளார்.

2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் 22 இடங்களை கைபற்றியது குறிப்பிடத்தக்கது.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x