Published : 09 Jan 2019 12:59 PM
Last Updated : 09 Jan 2019 12:59 PM

‘‘உரத்துக்கு பதில் இரும்பு’’ - ஈரானுடன் பண்டமாற்று வர்த்தகம்: இந்தியா அடுத்த அதிரடி

அமெரிக்காவின் மிரட்டலை புறக்கணித்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வரும் இந்தியா அடுத்தகட்டமாக அந்நாட்டுடன் பண்டமாற்று முறையில் சில பொருட்களை வர்த்தகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா அதற்கான தொகையை இந்திய ரூபாயில் செலுத்துகிறது. இதனால் டாலர் விலையேற்றத்தால் ஏற்படும் பாதிப்பு, ரூபாய் மாற்று தொகை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. அந்நியச் செலாவணி கையிருப்பு பராமரிப்பிலும் சிக்கல் இல்லை.

இதன் தொடர்ச்சியாக அதிக ஏற்றுமதி வாய்ப்பு உள்ள நாடுகளுடன் சொந்த நாட்டு நாணயத்தில் பரிவர்த்தனை செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்துடனும் இந்தியா சமீபத்தில் ஒப்பந்தம் செய்தது.

இந்த நாணய மாற்று ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளும் தங்கள் சொந்த நாட்டு நாணயத்தின் மூலமே வர்த்தகம் செய்து கொள்ளலாம். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சொந்த நாட்டு நாணயங்கள் மூலம் பணம் செலுத்தலாம். இதற்காக மூன்றாவது நாட்டு நாணயமாக அமெரிக்க டாலரை தேட வேண்டிய அவசியமில்லை.

டாலர் மதிப்பில் வர்த்தகம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் இனி இருக்காது. இந்திய வர்த்தகர்களும் இந்திய ரூபாய் மதிப்பில் இந்திய சந்தைகளை கணக்கீட்டு ஐக்கிய அரபு அமீரகத்துடன் வர்த்தகம் செய்ய இயலும். இதுபோலவே தங்கள் சொந்த நாட்டு நாணயத்தை கணக்கில் கொண்டு இந்தியாவிடம் இருந்து பொருட்களை வாங்கவோ, விற்கவோ அந்நாட்டால் முடியும்.

இந்தநிலையில் ஈரானுடன் முந்தைய காலத்தில் இருந்ததுபோல பண்டமாற்று முறையில் சில பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியா வந்த ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவேத் ஷெரிபுடன், மத்திய தரைவழி போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுவாரத்தை நடத்தினார்.

அப்போது ஈரானின் சாபர் துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கச்சா எண்ணெய் வர்த்தகத்தை இந்திய ரூபாயில் செய்வதைபோலவே, சில பொருட்களை பண்டமாற்று அடிப்படையில் வர்த்தகம் செய்வது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.

குறிப்பாக ஈரானி் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்படுத்துவதற்காக அதிகஅளவில் இரும்பு பொருட்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அவற்றை வாங்குவதற்கு நிதி சூழல் இல்லாத நிலையில் ஈரான் தவிக்கிறது. அதேசமயம், கச்சா எண்ணெய் தவிர பெட்ரோலிய பொருட்கள் சார்ந்த உரமும் அதிகஅளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

அமெரிக்காவின் மிரட்டல் காரணமாக இவற்றை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் ஈரான் உள்ளது. எனவே ஈரானிடம் இருந்து உரத்தை வாங்கிக் கொண்டு அதற்கு நிகரான தொகைக்கு இரும்பு பொருட்களை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா முன் வந்துள்ளது. ஈரான் அமைச்சர் ஜாவேத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது.

இதைத்தொடர்ந்து விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி ஈரானிடம் இருந்து இந்தியா ஏற்கெனவே கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. தற்போது பண்டமாற்று அடிப்படையில் வர்த்தகம் செய்யவும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x