Published : 08 Jan 2019 11:28 AM
Last Updated : 08 Jan 2019 11:28 AM

சபரிமலை போல வாவர் மசூதிக்கும் நாங்கள் செல்வோம்- இந்து மக்கள் கட்சிப் பெண்கள் கேரளாவில் கைது

சபரிமலைக்குப் பெண்கள் செல்வது போல வாவர் மசூதிக்கும் செல்வோம் என்று கூறி கேரளா சென்ற இந்து மக்கள் கட்சியின் பெண் தொண்டர்கள், அம்மாநிலக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கேரள மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.

சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய முயன்ற பல்வேறு இளம் பெண்கள், பக்தர்களின் எதிர்ப்பால் திரும்பிச் சென்றனர். இந்த சூழலில் கடந்த வாரம் இரு பெண்கள் போலீஸார் பாதுகாப்புடன் ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் சாமி தரிசனம் செய்தார். இவர்கள் அனைவருமே 50 வயதுக்குட்பட்டவர்கள். இது பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியது.

இந்நிலையில் வாவர் பள்ளிவாசலுக்குள் சில தமிழகப் பெண்கள் நுழையத் திட்டமிட்டுள்ளதாக கேரள காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. கேரளத்தின் எருமேலி பகுதியில் வாவர் சாமி மசூதி உள்ளது. இந்த மசூதிக்குள் பெண்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் இருந்து கேரளா வரும் அனைத்துப் பயணிகளையும் காவல்துறையினர் பரிசோதனை செய்தனர். இதையடுத்து வேலந்தாவளம் சோதனைச் சாவடியில் 6 இளம்பெண்களைக் காவலர்கள் சோதனையிட்டனர். சோதனையில் அவர்கள் இந்து மக்கள் கட்சித் தொண்டர்கள் என்பதும் திருப்பூர் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

3 ஆண்களுடன் வந்த அவர்கள், சபரிமலை சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்யப் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதுபோல, வாவர் மசூதிக்குச் செல்லவும் தடை நீக்கப்பட வேண்டும் என்று கூறினர். விசாரித்த காவல்துறையினர், அவர்களைக் கைது செய்தனர்.

அவர்கள் வந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x