Last Updated : 02 Jan, 2019 08:49 AM

 

Published : 02 Jan 2019 08:49 AM
Last Updated : 02 Jan 2019 08:49 AM

மோடியின் ஆட்சியிலேயே ராமர் கோயில் கட்டப்படும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்: ஆர்எஸ்எஸ் கருத்து

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார். அப்போது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று சிவசேனா கட்சி, ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்துத்துவா அமைப்புகள் வலியுறுத்தி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த பிரதமர் மோடி, “ உச்ச நீதிமன்றத்தில் ராமர் கோயில் தொடர்பான வழக்கு வரும் 4-ம் தேதி வர இருக்கிறது. ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தபின்புதான் ராமர் கோயில் கட்டுவது குறித்த அரசின் நடவடிக்கை இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போதுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக் காலம் வரும் மே மாதத்தோடு முடிந்துவிடும் என்பதால், அதற்குள் ராமர் கோயில் கட்டுவது குறித்து உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் வலியறுத்தி வருகின்றன.

பிரதமர் மோடியின் பேட்டி குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு டிவிட்டரில் கருத்து தெரிவிக்கையில், “ 2014-ம் ஆண்டு பாஜக தேர்தல் அறிக்கையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான சட்டவிதிகளுக்கு உட்பட்டு அனைத்துச் சாதகமான நடவடிக்கைகளும் மோடியின் ஆட்சியின் கீழ் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் நாட்டு மக்கள் பாஜகவுக்கு பெரும்பான்மையா வாக்களித்து பாஜகவை ஆட்சியில் அமரவைத்தார்கள், பாஜகவின் வாக்குறுதியை நம்பினார்கள். ஆதலால், மோடியின் ஆட்சி முடிவதற்குள் ராமர் கோயில் கட்டப்படும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் பிரதமர் மோடியின் கருத்துக்கள் சாதகமான போக்கை வெளிப்படுத்துகிறது ” எனத் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x