Last Updated : 01 Jan, 2019 12:15 PM

 

Published : 01 Jan 2019 12:15 PM
Last Updated : 01 Jan 2019 12:15 PM

ஆதரவற்ற குழந்தைக்கு நள்ளிரவில் பாலூட்டிய பெண் போலீஸ்: ஹைதராபாத்தில் நெகிழ்ச்சி

ஆதரவற்ற குழந்தைக்கு பாலூட்டுவதற்காகப் பெண் போலீஸ் ஒருவர் விடுமுறையில் இருந்த நிலையிலும் காவல் நிலையம் வந்து பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு நின்றிருந்த முகமது இர்பான் என்பவரிடம் ஒரு பெண், 2 மாத பச்சிளங் குழந்தையைக் கொடுத்து, தண்ணீர் வாங்கி வரும் வரை குழந்தையை கவனிக்கக் கூறியுள்ளார்.

ஆனால், நீண்டநேரமாகியும் குழந்தையின் தாய் வரவில்லை. இதையடுத்து, இர்பான் குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், குழந்தை பசியால் அழத் தொடங்கியதும் அவரால் ஒன்றும் செய்ய இயவில்லை.

இதையடுத்து, குழந்தையை அப்சல்கஞ் காவல் நிலையத்தில் நடந்த விவரங்களைக் கூறி ஒப்படைத்தார். ஆனால், குழந்தை தொடர்ந்து அழுததால் அங்கு இரவுப் பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் எம்.ரவீந்தர் என்பவர் தனது மனைவி பிரியங்காவுக்கு போன் செய்தார்.

ரவீந்தர் மனைவி, பேகம்பட் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவருக்குக் குழந்தை பிறந்ததால், பிரசவ விடுப்பில் இருந்தார். தனது கணவர் நடந்த விஷயங்களைக் கூறியதால், தனது வீட்டில் இருந்து வாடகைக் கார் மூலம் அப்சல்கஞ் காவல் நிலையத்துக்கு வந்தார். அங்கு அழுது கொண்டிருந்த குழந்தைக்கு அவர் பாலூட்டினார். அதன்பின் குழந்தை அழுகையை நிறுத்தியது.

அதன்பின் அந்தக் குழந்தையை பெட்லாபர்க் பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவனையில் போலீஸார் ஒப்படைத்தனர். அதன்பின் போலீஸார் நடத்திய விசாரணையில் அந்தப் பச்சிளங் குழந்தையின் தாய் பெயர் ஷபானா பேகம் என்பதும் சாலையில் குப்பை சேகரித்து பிழைப்பு நடத்தி வருபவர் என்பதும் தெரியவந்தது.

அந்தப் பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் சுயநினைவற்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், அந்தக் குழந்தையை மகப்பேறு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

அப்சல்கஞ் போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருக்கும் ரவீந்தர், பேகம்பட் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருக்கும் ரவீந்தர் மனைவி பிரியங்காவுக்கு ஹைதராபாத் நகர காவல் ஆணையர் அஞ்சனி குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வெளியான பின் பெண் போலீஸ் பிரியங்காவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x